தே.மு.தி.க.,விற்கு 8 தொகுதிகள்; தி.மு.க., கூட்டணி பேச்சில் முன்னேற்றம்
தே.மு.தி.க.,விற்கு 8 தொகுதிகள்; தி.மு.க., கூட்டணி பேச்சில் முன்னேற்றம்
UPDATED : அக் 29, 2025 07:02 AM
ADDED : அக் 29, 2025 04:56 AM

தி.மு.க., கூட்டணியை விரிவுப்படுத்தும் வகையில், தே.மு.தி.க.,விற்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய, நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி விரிவுப் படுத்தப்பட உள்ளது. புதிய வரவாக, தே.மு.தி.க., இடம் பெற உள்ளதாகவும், அதற்கான தொகுதி பங்கீடு பேச்சு, திரைமறைவில் நடந்து வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு 5 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' என, உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு அ.தி.மு.க., வாய்ப்பளிக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தே.மு.தி.க., வரும் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற விரும்பவில்லை.
அ.தி.மு.க., கூட்டணி தொடர்ந்து தோல்வி அடைவதால், வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற வேண்டும். கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என, அக்கட்சியினர் விரும்புகின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள, கட்சி பொதுக்குழுவில், கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா திட்ட மிட்டுள்ளார்.
இதற்கிடையில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, ரகசியமாக கூட்டணி பேச்சு நடந்துள்ளது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2011 சட்டசபை தேர்தலுக்கு பின், தே.மு.தி.க., எதிலும் வெற்றி பெறவில்லை. வரும் சட்டசபை தேர்தலில், வாழ்வா, சாவா என்ற நிலை, தே.மு.தி.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பை அளிக்கக்கூடிய, சில ஆயிரம் ஓட்டுகள் இருப்பதால், அக்கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு, தி.மு.க., தலைமை விரும்புகிறது.
தி.மு.க.,விடம் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளைப் பெற, தே.மு.தி.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தே.மு.தி.க., வெற்றி பெறக்கூடிய, எட்டு தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க, தி.மு.க., தயாராகி உள்ளது.  இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

