உங்களில் ஒருவன்: தமிழகம் என்றும் மோடி பக்கம் யாத்திரை வாயிலாக நிரூபணம்
உங்களில் ஒருவன்: தமிழகம் என்றும் மோடி பக்கம் யாத்திரை வாயிலாக நிரூபணம்
ADDED : பிப் 24, 2024 04:11 AM

பல்வேறு பருத்தி ஆலைகள் சூழ்ந்திருக்கும் சிங்காநல்லுார், முன்பு கோவையின் எல்லையில் இருந்தது. அதுவே இன்று கோவையின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது. இங்கிருக்கும் ஆலைகளும்; தொழிற்சாலைகளும் வரிகளை வாரிக்கொடுத்தாலும், பங்காளி அரசுகளின் பார்வையில் படாமல் அதிகம் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக இருப்பது துரதிஷ்டமே.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் கொண்டாடும் கொங்கு மண்டலத்தில், 'என் மண்; என் மக்கள்' நடைபயணம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது, பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்.
எப்போதுமே அரசியலை ஒரு விரிவான கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் கோவை மக்கள். உலகத்தில் எங்கே ஒரு பிரச்சனை நடந்தாலும், அது கோயம்புத்துாரையும் பாதிக்கும் அளவிற்கு உலகளாவிய தொடர்புள்ள நகரம்.
கோவையில் மலரும் தாமரை
மத்திய அரசின் சிறு, குறு தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் அதிகமாக பயன்பெற்ற மாவட்டம் கோவை. அங்கு உற்பத்தியாகும் பொருட்கள், உலகம் முழுதும் செல்கின்றன.
உலகம் முழுதுமான தாக்கம் இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக கோயம்புத்துார் மக்கள் நன்றாக இருக்கிறார்கள், எந்தப் பிரச்னையும் நமக்கு இல்லை என்றால், அதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஒரே ஒரு மனிதர் பிரதமர் மோடி மட்டுமே.
கோவை மாவட்டத்தில் மட்டுமே 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. அதனால் தான், இந்த ஊரை கல்லுாரிகளின் நகரம் என்று சொல்வர். படித்த, பண்பான நாகரிகமான மக்கள். அரசியல் தொலைநோக்கு பார்வையோடு ஓட்டளிக்கக் கூடியவர்கள்.
அதனால் தான் 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தின் முதல் தாமரை கோயம்புத்துாரில் இருந்து மலரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இரு நுாறு தொகுதிகளைக் கடந்த நம் மக்கள் பயணம், கடுமையான பயணமாகவே இருந்திருக்கிறது. தி.மு.க., அரசின் பல தடைகளைக் கடந்து, இன்று, மாபெரும் மக்கள் இயக்கமாக உருவாகி இருக்கிறது. ஒரு புதிய அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்துடன், எத்தனை சங்கடங்கள் வந்தாலும், அதை துணிச்சலுடன் எதிர்கொண்டு பயணிக்கிறோம்.
நாங்கள் மேற்கொள்ளும் இந்த புனித பயணத்தின் விளைவாக கிடைக்கக் கூடிய அரசியல் மாற்றத்தில், ஒரு நாளும், ஓரிடத்திலும் ஊழல் இருக்காது, லஞ்சம் இருக்காது, குடும்ப அரசியல் இருக்காது.
மூன்றாவது முறை பிரதமர்
அப்படிப்பட்ட நேர்மையான அரசியல் தமிழகத்திலும் கட்டாயம் உருவாகும். அதற்கு முன், மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியை மோடியே அலங்கரிக்க வேண்டும்.
நடப்பு 2024ம் ஆண்டு, சரித்திரத்தில் மிக முக்கியமான காலம். இது நமக்கானது. அதனால், இந்த வாய்ப்பை தவறியும் தவற விட்டுவிடக்கூடாது. இந்த வாய்ப்பைத் தவற விடுவது, நாம் செய்த சரித்திரப் பிழை ஆகிவிடும்.
பா.ஜ.,வில் தகுதியும், திறமையும் இருக்கும் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். பார்லிமென்ட், சட்டசபை உறுப்பினர்கள் ஆகலாம்.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த எத்தனையோ பேர், நம் மத்திய இணையமைச்சர் முருகனைப் போல, மத்திய அமைச்சர்கள் ஆகி உள்ளனர்.
அனைத்து முதல் தலைமுறை இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் இயக்கம் என்றால், அது பா.ஜ., மட்டும் தான்.
மத்திய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றி அறிவிப்பதற்காக மட்டுமே தி.மு.க., அரசு பட்ஜெட் போட்ட மாதிரி, அதில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மொத்தத்தில் சொந்தமாகக் கூட எதையும் யோசிக்கவோ, செய்யவோ தெரியாதவர்கள் தான், தி.மு.க.,வில் இருக்கும் மெத்தப்படித்த மேதாவிகள். கேட்டால், எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டர்; உலகப் பேச்சு பேசுவர். ஆனால், காப்பியடிப்பதில் மட்டும் முனைப்புடன் இருப்பார்கள்.
மூன்றாண்டு வஞ்ச னை
எப்படியோ, திட்டங்களை காப்பியடிக்க மத்திய அரசு ஒரு கருவியாக இருக்கிறது என்பதையாவது, உளமாற அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சாராய விற்பனை வாயிலாக வரும் வருமானம் மட்டும் 50,000 கோடி ரூபாய். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சாராயம் விற்பனை 50,000 கோடி ரூபாய் அளவுக்கு இல்லை.
இந்தியா முழுதும் பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு விலையைக் குறைத்த பின்பும், தி.மு.க., அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், மூன்று ஆண்டுகளாக வஞ்சித்து வருகிறது. இத்தனைக்குப் பின்பும், தமிழகத்தைக் கடன்கார மாநிலமாக மாற்றியது மட்டும்தான் மிச்சம்.
உலக நாடுகள் மதிக்கும் உன்னத தலைவராக நம் பிரதமர் மோடி விளங்குகிறார். அவர் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து காட்டும் மாமனிதர். தமிழக மக்கள் இப்போது பா.ஜ., பக்கம். அதுமட்டுமல்ல, பிரதமர் மோடி பக்கம் என்பதை, 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரையை வெற்றி யாத்திரையாக்கியதில் இருந்து, சொல்லாமல் சொல்லி விட்டனர்.
வரும் பிப்., 27ல், பிரதமர் மோடி பங்கேற்கும் பா.ஜ., பாதயாத்திரை நிறைவுக்கு வருகிறது. அன்றைய நிகழ்வு ஒரு சரித்திர நிகழ்வாக இருக்கும்.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்ப நிகழ்வாக எண்ணி, இதில் பங்கேற்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பயணம் தொடரும்...

