பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு 90 சதவீதம் குறைந்து விட்டது
பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு 90 சதவீதம் குறைந்து விட்டது
UPDATED : ஜூலை 10, 2025 06:53 AM
ADDED : ஜூலை 10, 2025 06:52 AM

மதுரை : 'பத்தாண்டுகளுக்கு முன் பொதுத்துறை வங்கிகளில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். 2025ல் 6128 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பு 90 சதவீதம் குறைந்ததாக' வங்கிகள், எல்.ஐ.சி., பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன தொழிற்சங்க பிரதிநிதிகள் நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் தெரிவித்தனர்.
மதுரையில் நடந்த பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் வங்கிகள், எல்.ஐ.சி., பொதுத்துறை இன்சூரன்ஸ், அஞ்சல் துறை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் கூட்டமைப்பு, அகில இந்திய பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல பொருளாளர் சிவசுப்ரமணியன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரன் பேசியதாவது:
10 மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 25 கோடி ஊழியர்கள் நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை கொரோனா காலகட்டத்தில் விவாதமின்றி மத்திய அரசு பார்லியில் நிறைவேற்றி, சட்டம் என்பதை 'லேபர் கோடு' என கொண்டு வந்தது. தற்போது 4 சட்டங்களே அதில் உள்ளன. இதுவும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இல்லை.
இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம். இதை நடைமுறைப்படுத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திடீரென வெளியேற வாய்ப்புள்ளது. வேலை வாய்ப்பு அதிகரிக்க சாத்தியம் இல்லை. பொதுதுறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒருங்கிணைத்தால் தனியார் முதலீட்டுக்கு வேலையே இல்லை. இதனால் தான் மத்திய அரசு ஒருங்கிணைக்க மறுக்கிறது.
மக்களின் வருமானம் குறைந்து வேலையின்மையும் அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பேர் வங்கிகளில் வேலை வாய்ப்பு பெற்றனர். 2025ல் வேலைக்கு தேர்வானோர் 6128 பேர் தான். வங்கி, இன்சூரன்ஸ், அஞ்சல் எல்லா துறைகளிலும் வேலைவாய்ப்பை மத்திய அரசு குறைத்து விட்டது. தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலிக்கு தேர்வு செய்யும் திட்டம் அதிகரித்ததால் தொழிலாளர் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் போக்கை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவித்தோம் என்றனர்.