'‛ தாய்மாமன்' விஜய்யின் 'அங்கிள் அரசியல்' மதுரையில் 'மாஸ்' காட்டினாரா
'‛ தாய்மாமன்' விஜய்யின் 'அங்கிள் அரசியல்' மதுரையில் 'மாஸ்' காட்டினாரா
UPDATED : ஆக 23, 2025 10:04 AM
ADDED : ஆக 23, 2025 05:16 AM

மதுரை: த.வெ.க., கட்சித் தலைவர் விஜய் நேற்று முன்தினம் மதுரையில் நடந்த கட்சி மாநில மாநாட்டில் பேசும் போது, முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் ரசிக்கப்படவில்லை. அதேநேரத்தில் அவரைப் பார்க்க லட்சக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டம், மற்ற கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாநாட்டுக்கு 2 லட்சம் பேர் வரை வருவர் என எதிர்பார்த்த நிலையில், 3 லட்சம் பேர் வரை வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கணக்கை விட, அதிகமாகவே கட்சியினர் பங்கேற்றுள்ளனர். நடிகர்களை கொண்டாடும் ஊர் மதுரை என்ற பெயருண்டு. இங்கு நடத்திய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டது விஜய் என்கிற நடிகருக்காக தான்; த.வெ.க., கட்சித் தலைவரை காண அல்ல என்று பிற கட்சியினர் கூறுகின்றனர். இதனை நிரூபிப்பது போல, விஜய் 'ராம்ப் வாக்' முடிந்து மேடையேறிய அடுத்த சில நொடிகளிலேயே அவரது பேச்சுக்காக காத்திருக்காமல், ஆயிரக்கணக்கானோர் கொத்து கொத்தாக கலைந்து வெளியேறினர்.
ஓட்டாக மாறுமா நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர், நடிகை வந்தால் அந்த ஏரியாவே ஸ்தம்பித்து விடும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தமிழகத்தில் வாடிக்கை.
ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி துவங்கிய போது 5 லட்சம் பேர் திரண்டனர். காலப்போக்கில் கட்சியையே கரைத்து அவர் வெளியேறினார். மதுரையில் நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்த போதும் இந்த அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும், ஏன் வைகோ ம.தி.மு.க., ஆரம்பித்த போதும் மக்கள் அதிக அளவில் திரண்டனர். எனவே இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது' என்கின்றனர் விஜய் எதிர்ப்பாளர்கள்.
இது பணம் கொடுத்து அழைத்து வந்த கூட்டம் அல்ல; சாப்பாடு கூட அளிக்கவில்லை. மாறாக விஜய் என்ற தனிமனிதனுக்காக வந்த கூட்டம்; அதுவும் தென் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளனர்.
அதில் 90 சதவீதம் பேர் 40 வயதுக்கு குறைவானர்கள். இவர்கள் தாங்களும் ஓட்டளிப்பார்கள், குடும்பத்து பெரியவர்களையும் ஓட்டளிக்க வைப்பார்கள்,' என்கின்றனர் விஜய் ஆதரவாளர்கள்.
விஜய்யின் மேடை பேச்சு விஜய்யின் மேடை பேச்சு பற்றி அலசினால்...
* மாநாட்டில் 'வாரிசு அரசியல்' பற்றி பேசவில்லை. அவரது பெற்றோரே மேடையில் இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
* இளைஞர்களுக்காக எந்த கருத்தையும் சொல்லவில்லை. எதிர்கால இந்தியா, வேலைவாய்ப்பு உருவாக்கம் என எந்த நாட்டின் வளர்ச்சி பற்றிய கருத்துக்களையும் பேசவில்லை.
* எல்லா அரசியல்வாதிகளும் மோடியை எதிர்க்க எப்போதும் பேசும், 'நீட்தேர்வு, கச்சத்தீவு மீட்பு, கீழடி வரலாறு மறைப்பு' தவிர வேறு புதிதாக பேசவில்லை. மத்திய அரசின் பிற கொள்கைகளை, சட்டத்திருத்த மசோதாக்களை கண்டுகொள்ளவில்லை.
* 'என்ன மிஸ்டர் வேதநாயகம்... அல்லு விடுதா' என வேட்டைக்காரன் படத்தில் வில்லனை பார்த்து டயலாக் பேசுவதைப் போல, 'வாட் ப்ரோ... வொய் ப்ரோ' என்ற டயலாக்கை போல 'வாட் அங்கிள்... ராங் அங்கிள்.. வொர்ஸ்ட் அங்கிள்' என்று முதல்வரை சீண்டிப் பேசியது அரசியல் நாகரிகத்தை மீறிய சினிமா பஞ்ச் வசனங்களாகவே பார்க்கப்பட்டது. மாநிலத்தின் முதல்வரை, இன்னொரு கட்சித்தலைவர் அதுவும் 51 வயதானவர் 'அங்கிள்' என்று பொதுமேடையில் கிண்டலாக அழைத்ததை மக்கள் ரசிக்கவில்லை. 'அப்பா என்று கூப்பிடச் சொன்னீர்களே அங்கிள்' என்று பேசியதும் ரசிக்கப்படவில்லை.
* தாய் மாமன் -நல்ல ஐடியா n தமிழக சகோதரிகளின் பிள்ளைகளுக்கு நான் தாய்மாமன் என்றார். இதுவரை அரசியலில் எல்லோரும் அம்மா, அய்யா, அப்பா, அண்ணன், அண்ணி என்று சொல்லி வந்த நிலையில் 'தாய்மாமன்' என்ற சொல், இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.
* அ.தி.மு.க., கட்சி இன்று எந்த நிலையில் உள்ளது... என வருத்தப்பட்டு எம்.ஜி.ஆரையும் மதுரை மண்ணுக்கு சொந்தக்காரரான விஜயகாந்தையும் தனக்கு கூட்டணி சேர்த்துக் கொண்டது அவ்விரு கட்சிகளின் ஓட்டுக்களையும் கபளீகரம் செய்யும் நோக்குடன் தான். இளசுகளின் ஓட்டு தனது முகத்திற்காகவும் நடுத்தர வயதினரின் ஓட்டு விஜயகாந்த், முதியவர்களின் ஓட்டு எம்.ஜி.ஆரின் முகங்களுக்காக கிடைக்கும் என்பதற்காகவே விஜய் இப்படி பேசினார். இது அந்த கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
* மறைமுகமாக கமலை சீண்டினார். ரிடையர்டராகி, மார்க்கெட் போன காலத்தில் அரசியலுக்கு வரவில்லை என்றதன் மூலம் கமலைச் சொல்கிறார் . 'அவரே வரல... இவரா வருவாரு' என்றதன் மூலம் நேரடியாக ரஜினியை சீண்டியுள்ளார்.
* பிற கட்சிகளுக்கு கலக்கம் n பா.ஜ., கொள்கை எதிரி, தி.மு.க.,அரசியல் எதிரி என்று பேசினார். ஆனால் கொள்கை எதிரிக்கும், அரசியல் எதிரிக்கும் என்ன வேறுபாடு என்பதையெல்லாம் விஜய் விளக்கவில்லை.
* மாநாட்டு தீர்மானங்களிலும் புதுமை இல்லை. கட்சிகளின் வழக்கமான பரந்துார் விமானநிலையம், கச்சத்தீவு மீட்பு போன்றவையே தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
விஜய்யின் மாநாட்டு பேச்சில் குறை, நிறைகள், சர்ச்சைகள் இருந்தாலும் அது பிற அரசியல் கட்சிகளுக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பது மட்டும் உண்மை. கூடிய கூட்டமும் 2026 தேர்தலில் போட்டி பயங்கரமாக இருக்கும் என்று பிற கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது.
விஜய்க்கு முந்தைய நிறைய அரசியல் வரலாறுகளை தமிழகம் பார்த்துள்ளது. இனிமேல் இவரது அரசியல் வரலாறையும் பார்க்கும்.