ஆங்கில புலமை, உடல் வலிமை காங்கிரசாருக்கு ராகுல் அறிவுரை
ஆங்கில புலமை, உடல் வலிமை காங்கிரசாருக்கு ராகுல் அறிவுரை
ADDED : மார் 08, 2025 08:00 AM

புதுடில்லி: 'எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தை பெற, உடல் வலிமை, ஆங்கில புலமை, யோகா, தியானம், உணவு கட்டுப்பாடு அவசியம்' என, மாணவர் காங்கிரஸ் தலைவர்களுக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் அறிவுரை வழங்கியுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், சேவாதள காங்கிரஸ் அமைப்புகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மற்றும் தேசிய நிர்வாகிகளை டில்லிக்கு அழைத்து, ராகுல் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். சமீபத்தில், தமிழக மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 15 பேரை அழைத்து, அவர்களுடன் ஒரு நாள் கலந்துரையாடினார்.
அதில் ராகுல் பேசியுள்ளதாவது: இன்றைய மாணவர்கள், நாளை அரசியல் தலைவர் என்பதில் மாற்றம் இல்லை. நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில், கவுன்சிலர், நகராட்சி தலைவர், எம்.எல்.ஏ., - எம்.பி., மாநில அமைச்சர், முதல்வர், மத்திய அமைச்சர், பிரதமர் போன்ற பதவிகளை பெற முடியும். அதற்காக, நீங்கள் லட்சிய உணர்வுடன் மக்கள்நலப் பணி, கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தலைமை பண்பை வளர்க்கும் திறமைகளை உருவாக்க வேண்டும். படிப்பு முடிந்த பின், நாம் என்னவாக வேண்டும் என்ற விருப்பத்தை அடைய திட்டமிடல் அவசியம்.
ஒரு டைரியில் எழுதி வைத்து, அதை செயல்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். நள்ளிரவு 1:00 மணிக்கு துாங்க சென்றாலும், காலை 5:00 மணிக்கு எழுந்திட வேண்டும். காலை டிபன், 8:30 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு டிபனை மாலை 7:00 மணிக்குள் முடிக்க வேண்டும்.காலையில் உடற்பயிற்சி செய்து, உடல் வலிமையோடு இருக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்த யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் மேற்கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை கைவிட வேண்டும். குறிப்பாக, சைவ உணவு சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்; சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.
மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்த வேண்டும். அதிகாரத்தை அடைய, ஆங்கிலம் ஒரு கருவியாக உள்ளது. எனவே, ஆங்கில புலமையை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
டயலாக்: நான் சொல்றத பாலோ பண்ணினா நீங்க எல்லோரும் சி.எம்., தான்.
- நமது நிருபர் -