UPDATED : மார் 17, 2024 04:54 AM
ADDED : மார் 16, 2024 10:42 PM

காங்கிரசின் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தாலும், அனைத்து முக்கிய முடிவுகளையும் ராகுல் தான் எடுக்கிறார். இதன் விளைவு, 'கட்சியில் குழப்பம்' என்கின்றனர் சில சீனியர் தலைவர்கள்.
'ஹிமாச்சல பிரதேசத்தில் காங்., ஆட்சி நடந்தாலும், ராஜ்யசபா தேர்தலில் தோற்றுப் போனது. இதற்கு காரணம், ராகுல் தான்' என, ஹிமாச்சல காங்., பிரமுகர்கள் கூறுகின்றனர்.
இங்கு, ராஜ்ய சபா சீட்டை உள்ளூர் தலைவருக்கு தராமல், வெளியூர்காரரும், பிரபல வக்கீலுமான அபிஷேக் மனு சிங்விற்கு கொடுத்தார்; விளைவு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பா.ஜ.,விற்கு ஓட்டளித்தனர்.
அதே போல, 'ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் கட்சி தோற்றதற்கும் ராகுலின் முடிவு தான் காரணம்' என, ராஜஸ்தான் காங்., தொண்டர்கள் குமுறுகின்றனர்.
'சச்சின் பைலட் தான் முதல்வர்' என, கடந்த சட்டசபை தேர்தலில் சச்சினுக்கு சத்தியம் செய்யாத குறையாக சொன்னார் ராகுல்; ஆனால், கெலாட் முதல்வரானார். இதனால், பதவிக் காலம் முடியும் வரை கோஷ்டி அடிதடிகள் அரங்கேறின.
இந்த முறையாவது சச்சின் பைலட் முதல்வர் என, சொல்லியிருக்கலாம்; ஆனால், ராகுல் அமைதி காத்தார். இப்படி ராகுல் எடுத்த பல முடிவுகள், கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதித்துள்ளன' என்கின்றனர்.
'காங்கிரஸ் நிச்சயம் வீறு கொண்டு எழும்; ஆனால், அதற்கு ராகுல் சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்' என்பதே தொண்டர்களின் ஆதங்கம்.

