UPDATED : ஜன 17, 2024 03:51 AM
ADDED : ஜன 17, 2024 03:42 AM

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியது தொடர்பாக, டில்லியில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் அளித்த விளக்கத்தை தொடர்ந்து, அவர் மீது தமிழக காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கை குழு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நோட்டீசை புறக்கணிக்கும்படி ராகுல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'டிவி' சேனலுக்கு காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர்களான கார்கே, ராகுல் கூட பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர்கள் இல்லை என, கூறியிருந்தார்.
இதையடுத்து, சொந்தக் கட்சித் தலைவர்களை கார்த்தி சிதம்பரம் சிறுமைப்படுத்தி விட்டார்; அதனால் அவர் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருக்கு எதிராக எதிர்கோஷ்டியினர் கட்சித் தலைமையிடம் புகார் கூறி நெருக்கடி கொடுத்தனர்.
இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியதாக செய்தி பரவியது. ஆனால், தனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என கார்த்தி சிதம்பரம் கூறி வந்தார்.
இப்படி தமிழக காங்கிரசில் இரு மாறுபட்ட கருத்துக்கள் எழுந்து, சலசலப்பை ஏற்படுத்தியது.
பொங்கலுக்கு முன் பிரதமர் மோடி குறித்து பேசிய வீடியோ ஆதாரங்களுடன், ஆங்கிலத்தில் தயாரித்த அறிக்கையை கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாரிடம் வழங்கினர்.
மேலும், டில்லியில் கார்த்தி சிதம்பரமும், அஜோய்குமாரை சந்தித்து, தன் மீதான சர்ச்சைக் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து, 'நோட்டீஸ் விவகாரத்தை புறக்கணியுங்கள்' என, ராகுல் உத்தரவிட்டு, கார்த்தி சிதம்பரம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றியுள்ளார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-நமது நிருபர்-

