மனம் குளிர வைத்த மழை; திரும்பியது இயல்பு நிலை! பாசன பகுதிகளில் உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்
மனம் குளிர வைத்த மழை; திரும்பியது இயல்பு நிலை! பாசன பகுதிகளில் உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்
UPDATED : ஜன 04, 2025 06:18 AM
ADDED : ஜன 03, 2025 10:04 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை கை கொடுத்ததால், அணைகளின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதனால், பாசனத்துக்கும், குடிநீருக்கும் இந்தாண்டு பஞ்சம் இருக்காது, என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. கால்வாய் பாசனம், கிணற்று பாசனம், மானவாரியில், காய்கறி, நிலக்கடலை உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், போதியளவு நீர் கிடைத்ததால், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு காரணங்களினால், மழைப்பொழிவு குறைந்து, பொள்ளாச்சியை கடந்த, 2017ம் ஆண்டில்  வறட்சி வாட்டியது. சில ஆண்டுகள் வறட்சிக்கு பின், மழைப்பொழிவு கை கொடுத்தது.
கடந்த, 2023ம் ஆண்டு எதிர்பாராத வறட்சி காணப்பட்டது; பருவமழை கை கொடுக்காத சூழலில் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. குறைந்த நாட்கள் வழங்கப்பட்ட உயிர் நீரும் பற்றாக்குறையாக இருந்ததால், விலைக்கு நீர் வாங்கி பயன்படுத்தி தென்னையை காக்க விவசாயிகள் போராடினர்.
ஏற்கனவே, தென்னையில் நோய் தாக்குதல், தேங்காய்க்கு விலை இல்லாதது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தண்ணீர் பற்றாக்குறையும் நெருக்கடியை தந்தது. மானவாரியில் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திணறினர்.
இந்நிலையில், கடந்தாண்டு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகளவு பெய்து விவசாயிகளின் மனங்களை குளிரச் செய்தது.
பி.ஏ.பி., பாசனத்தில் உள்ள அனைத்து தொகுப்பு அணைகளும் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஆழியாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் வீணாகாமல், குளம், குட்டைகளுக்கு திருப்பி விடப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது. பாசனத்துக்கும் தடையின்றி நீர் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஆண்டில் பருவமழை கை கொடுத்ததால், பாசன விவசாயிகள் பயனடைந்தனர். மூன்று ஆண்டுக்கு பின், பி.ஏ.பி., பாசனத்தில், ஐந்து சுற்று தண்ணீர் சாத்தியமாகியுள்ளது. ஆழியாறு பகுதியில் இரண்டு போக நெல் சாகுபடி மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் விவசாயிகள் கேட்ட நீர் கிடைத்துள்ளது.
நீர் இருப்பு திருப்தி
பி.ஏ.பி., திட்டத்தில் உள்ள சோலையாறு, பரம்பிக்குளம், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி, கீழ்நீராறு என நடப்பாண்டு மொத்தம், 18,781.81 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதே நாளில் கடந்தாண்டு அணைகளில், 9273.20 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. கடந்தாண்டை விட, 9,508.61 மில்லியன் கனஅடி நீர் இருப்பு அதிகமாக உள்ளதால், குடிநீருக்கும், பாசனத்துக்கும் பஞ்சம் ஏற்படாது. பாசன பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது, என விவசாயிகள் தெரிவித்தனர்.
கை கொடுத்தது
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:
தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால், பி.ஏ.பி., திட்ட அணைகளின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐந்து சுற்று தண்ணீர் வழங்க முடிந்துள்ளது. விவசாயிகள் தென்னை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பருவமழை நன்றாக பெய்தாலும், பருவம் தவறி பெய்ததால் மானாவாரி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இந்த மழை கை கொடுக்கவில்லை. எனினும் மழையால், பொள்ளாச்சியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இவ்வாறு, கூறினார்.
பாலாற்றில் வெள்ளம்
ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் அணைகள் நிரம்பின. அதன்பின், வடகிழக்கு பருவமழை பெய்து, அணைகள் நீர்மட்டம் குறையாமல் இருக்க உதவியாக இருந்தது. பல ஆண்டுக்கு பின், நவ., டிசம்பரில், முழு கொள்ளவுடன் அணைகள் நிரம்பி காண்பது மகிழ்ச்சியாக இருந்தது.
பி.ஏ.பி., பாசனத்துக்கு முழு அளவில் உதவிக்கரமாக மழை இருந்தது எனக்கூறலாம். மேலும், திருமூர்த்தி, நல்லாறு மற்றும் மலைப்பகுதிகளில் பெய்த வடகிழக்கு பருவமழையால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த, இரண்டு மாதங்களாக பாலாற்றில் வெள்ள நீர் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இதனால், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இவ்வாறு, கூறினார்.

