முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி: தி.மு.க.,வில் திடீர் ஆலோசனை
முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி: தி.மு.க.,வில் திடீர் ஆலோசனை
ADDED : ஜன 23, 2026 05:29 AM

தி.மு.க.,வில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளில், ஒன்றில் முதல்வரின் மருமகன் சபரீசனை நிறுத்த தி.மு.க., தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்களில், அ.தி.மு.க., - தம்பிதுரை, த.மா.கா., - வாசன், தி.மு.க., - சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, டாக்டர் கனிமொழி ஆகியோரின் பதவிக்காலம், வரும் ஏப்., 1ல் முடிகிறது.
தி.மு.க.,வுக்கு கிடைக்கவுள்ள நான்கு எம்.பி., சீட்டுகளில், இரண்டை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. ஒன்றை காங்கிரசுக்கும், மற்றொரு எம்.பி., சீட்டை விடுதலை சிறுத்தைகள் அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள இரண்டு எம்.பி., சீட்டுகளில், ஒன்றை முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு வழங்கவும், மற்றொன்றை தற்போதைய டில்லி பிரதிநிதி ஏ.கே.விஜயனுக்கு வழங்கவும் தி.மு.க., மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியின் துணை பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால், டில்லி அரசியலில் சபரீசனை ஈடுபடுத்த வேண்டும் என, முதல்வரிடம் மாவட்டச் செயலர்கள் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.
அதையடுத்து, தி.மு.க.,வுக்கு கிடைக்கவுள்ள நான்கு ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளில் ஒன்றில் சபரீசனை நிறுத்தி வெற்றி பெற வைத்து, அவரை டில்லிக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

