ராமதாஸ் - அன்புமணி தற்காலிக சமாதானம்: மாமல்லபுரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடிவு
ராமதாஸ் - அன்புமணி தற்காலிக சமாதானம்: மாமல்லபுரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடிவு
ADDED : ஏப் 19, 2025 02:24 AM

சென்னை: தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை தள்ளிவைத்து விட்டு, மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள, சித்திரை முழுநிலவு மாநாட்டில் முழு கவனம் செலுத்த, பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10ம் தேதி, பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். ஆனாலும், 'கட்சியின் தலைவராக நானே தொடர்வேன்' என அறிவித்த அன்புமணி, வரும் மே 11ம் தேதி நடக்கவுள்ள, சித்திரை முழுநிலவு மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 16ம் தேதி, மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில், மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழாவை, அன்புமணி நடத்தினார். இதில், பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் பாலு, பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அன்புமணியை நீக்கியதால், கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து, ராமதாசிடம் குடும்பத்தினரும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சமாதானம் பேசியுள்ளனர். அதைத் தொடர்ந்து தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை தள்ளிவைத்து விட்டு, மாமல்லபுரம் மாநாட்டில் முழு கவனம் செலுத்த ராமதாசும், அன்புமணியும் முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த 10ம் தேதிக்குப் பின், முதல்முறையாக நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், '1988 முதல் 2013 வரை 20 சித்திரை முழுநிலவு மாநாட்டை நடத்தியுள்ளோம். 12 ஆண்டுகளுக்குப் பின் இப்போது நடக்கும் மாநாட்டை, இதுவரை நடந்ததை விட, 100 மடங்கு சிறப்பாக நடத்த வேண்டும்.
எனது இந்த கனவை நிறைவேற்ற, நிர்வாகிகள் கிராமம், கிராமமாக செல்ல வேண்டும். அனைத்து கிராமங்களில் இருந்தும், அணி அணியாய் வாகனங்கள் புறப்பட வேண்டும். எல்லா ஊர்களிலும் சுவர் விளம்பரங்களும், பதாகைகளும் விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும். அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்துவர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
சின்ன குழந்தைகள் விளையாடும்போது, சற்று இடைவெளிக்காக 'வெயிட்டீஸ்' விடுவது போல, ராமதாசும் அன்புமணியும் திருவிடந்தை மாநாட்டுக்காக, தற்காலிக சமாதானம் அடைந்துள்ளதைத் தொடர்ந்தே, ஜி.கே.மணி உள்ளிட்டோர், மாநாட்டு பந்தக்கால் நடும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
சவுமியா
ஆன்மிக பயணம்
சித்திரை முழு நிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, தன் செல்வாக்கை நிரூபிக்க, அன்புமணி திட்டமிட்டுள்ளார். அவருக்கு துணையாக களமிறங்கியுள்ள மனைவி சவுமியா, கடந்த 10 நாட்களாக, வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ்கள் வழங்கி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, தன் பயணத்தை சவுமியா துவங்கினார்.
கடந்த 11ல், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற சவுமியா, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர், திருவீழிமிழலை விழிநாதேஸ்வரர், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வர், திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர், கருவலர்சேரி அகத்தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த சவுமியா, அங்குள்ள பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ்கள் வழங்கினார்.