தி.மு.க., கூட்டணிக்குள் இடம் பிடிக்க வி.சி.,யை சமாதானப்படுத்தும் ராமதாஸ்: பிடி கொடுக்காமல் பெங்களூரு சென்ற திருமா
தி.மு.க., கூட்டணிக்குள் இடம் பிடிக்க வி.சி.,யை சமாதானப்படுத்தும் ராமதாஸ்: பிடி கொடுக்காமல் பெங்களூரு சென்ற திருமா
ADDED : ஜன 23, 2026 05:41 AM

தி.மு.க., கூட்டணிக்குள் இடம் பிடிப்பதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சமதானப்படுத்தும் முயற்சியில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தரப்பு இறங்கியுள்ள நிலையில், ஆயுர்வேத சிகிச்சை பெறுவதாக கூறி, திருமாவளவன் பெங்களூருவுக்கு சென்றுள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'பா.ஜ., - பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில் வி.சி., சேராது' என உறுதியாக தெரிவித்து விட்டார்.
தற்போது, பா.ம.க.,வில் பிரச்னை ஏற்பட்டு கட்சி நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் தலைமையில் இரு பிரிவாக அக்கட்சி செயல்படுகிறது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், அன்புமணி தரப்பு பா.ம.க., சேர்ந்து விட்டது. அதேநேரம், ராமதாஸ் தரப்பு பா.ம.க., இதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை.
அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணி சேர்ந்து விட்டதால், தி.மு.க., கூட்டணியில் சேர ராமதாஸ் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், 'கூட்டணிக்குள் பா.ம.க., வந்தால், நாங்கள் வெளியேறுவோம்' என வி.சி., கூறுவதால், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., தயங்குகிறது. எனவே, திருமாவளவனை சமதானப்படுத்த, ராமதாஸ் தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.
ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ., அருள், 'திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன். வன்னியர், தலித்களை இரு தண்டவாளங்களாக ராமதாஸ் பார்க்கிறார்; எங்களுக்கு யாருமே எதிரி இல்லை' என்றார்.
மேலும், வி.சி.,யின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வாயிலாகவும், திருமாவளவனை சமதானப்படுத்த ராமதாஸ் தரப்பு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பா.ம.க., தரப்பினரை சந்திக்க விரும்பாமல், திருமாவளவன் பெங்களூருவுக்கு சென்று விட்டார். கண் வீக்கத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை பெறவே, அவர் அங்கு சென்றுள்ளதாக வி.சி., கட்சியினர் கூறுகின்றனர்.
- நமது நிருபர் -

