ஹிந்து பிரமுகர்களை 'டார்கெட்' செய்து ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு?
ஹிந்து பிரமுகர்களை 'டார்கெட்' செய்து ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு?
UPDATED : மார் 15, 2024 07:48 AM
ADDED : மார் 14, 2024 11:14 PM

பெங்களூரு: ஹிந்து பிரமுகர்களை குறி வைத்து, 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில் குண்டு வைத்ததாக, என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டு பகுதியில் உள்ள பிரபல 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி இரண்டு முறை குண்டு வெடித்தன.
சம்பவம் தொடர்பாக, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில், குண்டு வைத்த நபர், பல்லாரிக்கு சென்றதற்கான 'சிசிடிவி' வீடியோ வெளியானது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த தகவலின்படி, முக்கிய குற்றவாளியின் நெருங்கிய நண்பர் ஷபீர், 32, என்பவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூருக்கு அழைத்து வந்தனர்.
ரகசிய இடத்தில் வைத்து, விசாரணை நடத்திய பின், 'மீண்டும் விசாரணைக்கு அழைத்தால், வர வேண்டும்' என்று கூறி நள்ளிரவு திருப்பி அனுப்பி விட்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குண்டு வைத்த முக்கிய குற்றவாளிக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் இருப்பதாகவும், ஹிந்து பிரமுகர்களை குறி வைத்து, குண்டு வைத்ததும் தெரிய வந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, ஹிந்து பிரமுகர்களை தாக்க திட்டமிட்டது தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பெங்களூரு சுத்தகுண்டேபாளையா போலீஸ் நிலைய எல்லை பகுதியில் என்.ஐ.ஏ., சோதனையின் போது, தப்பியோடிய நபர்களுக்கு, குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே அப்போது தப்பியோடிய, சையத் அலி, அப்துல் மதீன், முஜாபர் உசேன் ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

