த.வெ.க.,வுடன் கைகோர்க்கும் ரங்கசாமி: தமிழகத்திலும் கூட்டணி அமைக்க திட்டம்?
த.வெ.க.,வுடன் கைகோர்க்கும் ரங்கசாமி: தமிழகத்திலும் கூட்டணி அமைக்க திட்டம்?
ADDED : நவ 03, 2024 01:16 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்., கட்சி, விரைவில் தமிழகத்திலும் தடம் பதிக்க ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை துவங்கி, முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் அண்மையில் பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ளார். இந்த மாநாடு ஏற்பாடுகளை முன்னின்று செய்தவர், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
விஜயின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் புஸ்சி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். இதனால், தமிழகத்துடன், புதுச்சேரியிலும் வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க, புஸ்சி ஆனந்திடம் ரகசிய 'அசைன்மென்ட்' ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, நடிகர் விஜய்க்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் நல்ல நட்பு உள்ளது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன், நடிகர் விஜய் ரங்கசாமியிடம் ஆசீர்வாதம் வாங்கிச் சென்றார்.
எனவே, புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - த.வெ.க., கூட்டணி அமைப்பதற்கான அச்சாரம் போடப்பட்டு வருகிறது. இதற்கு பின்னணியில் புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மாஜி அமைச்சர், தமிழக காங்., முன்னாள் தலைவர் மற்றும் பிரபல லாட்டரி அதிபர் ஆகிய மூவரும் காய் நகர்த்தி வருகின்றனர்.
கருத்து வேறுபாட்டினால் காங்., கட்சியில் இருந்து வெளியேறிய ரங்கசாமி, 2011 பிப்ரவரி 7ம் தேதி அகில இந்திய என்.ஆர்.காங்., கட்சியை துவக்கினார். என். ரங்கசாமி என்ற அவரின் பெயரைக் குறிக்கும் எழுத்துகள் கட்சியின் பெயராக வைத்துள்ளதாக விமர்சனம் எழுந்தது.
ஆனால், 'அகில இந்திய நமது ராஜ்ஜியம்' என்பதன் சுருக்கமே என்.ஆர்.,காங்., என கூறப்படுகிறது.
மேலும், இந்திய அளவில் போட்டியிடாமல், புதுச்சேரியில் மட்டும் போட்டியிட்டு வருவது, ரங்கசாமிக்கு நீண்ட காலமாக மனதில் கீறலாக இருந்தது.
எனவே, புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- த.வெ.க., கூட்டணி மலரும்போது, தமிழகத்திலும் 30 சீட்டுகள் வரை என்.ஆர்.காங்., போட்டியிட திட்டமிட்டு, தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளது.
இதற்கு விஜய்யும் 'ஓகே' சொல்லியுள்ள நிலையில், திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றது. இதனால் விரைவில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்., கால்தடம் பதிக்க உள்ளது.
வன்னியர் சமூகத்தை சேர்ந்த முதல்வர் ரங்கசாமிக்கு, தமிழகத்தில் கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி என பல்வேறு வன்னியர் சமுதாய தலைவர்களுடன் சுமூக உறவு உள்ளது.
இந்த தொகுதிகளில் என்.ஆர்.காங்., - த.வெ.க., கூட்டணி மலரும்போது பெரும்பான்மை சமுகத்தின் ஓட்டுகளை அறுவடை செய்து, சுலபமாக வெற்றி பெறலாம் என்பதே த.வெ.க.,வின் காய் நகர்த்தலுக்கான முக்கிய காரணம்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி அரசு இருந்தாலும், தமிழகத்தில் யாருடனும் என்.ஆர்.காங்., கூட்டணி இல்லை.
எனவே, த.வெ.க., - என்.ஆர்.காங்., கூட்டணி மலர்ந்ததும், கடலுாரில் ஒரு லட்சம் பேரை திரட்டி பிரமாண்ட மாநாடு நடத்தப்பட உள்ளது. சுபமுகூர்த்த நாளில் இதற்கான பணிகளை ஆரம்பிக்க, என்.ஆர்.காங்., நிர்வாகிகளுக்கும் அசென்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., - தி.மு.க., தான் எதிரி என்று நேரடியாக மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தில் த.வெ.க.,வுடன் என்.ஆர்.காங்., கூட்டணி அமையும்போது, வரும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர் காங்., - பா.ஜ., கூட்டணி தொடருமா என்ற கேள்வி புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.