ADDED : அக் 11, 2024 04:58 AM

சென்னை : நேற்று முன்தினம்(அக்.,9), இவ்வுலகை விட்டு நீங்கிய, நம் நாட்டை, தொழில்துறையில் தலைநிமிர்த்திய மாபெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா, திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்தாலும், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் வல்லுனராகத் திகழ்ந்தார். அவரின் வெற்றிப் பயணத்திற்கான அனுபவங்களை சிறந்த அறிவுரைகளாக அவ்வப்போது வழங்கி வந்துள்ளார்.
அவற்றில் சில:
* சரியான முடிவு எடுப்பது என்பதில் எனக்கு உடன்பாடில்லை; முடிவை எடுத்த பின் அதைச் சரிப்படுத்துவதே என் பழக்கம்
* இரும்பை யாரும் அழிக்க முடியாது; துருப்பிடித்து தானாக அழியும். அது போல, ஒரு மனிதனை, அவன் சிந்தனையைத் தவிர, வேறு யாரும் அழிக்க முடியாது
* அதிகாரமும், பணமும் எனக்கு குறிக்கோள்கள் அல்ல
* இடர்ப்பாடுகளைக் கையாள பயப்படுவது தான் முதல் இடர்ப்பாடு. தினமும் வேகமாக மாறும் தற்போதைய சூழலில், இடர்ப்பாடுகளைக் கையாள முயலாததே, தோல்விகளுக்குக் காரணமாக அமைகிறது
* தன்னை விட சாதுர்யமான இணை பொறுப்பாளர்களையும், உதவி யாளர்களையும் வைத்திருக்க ஆசைப்படுபவரே சிறந்த தலைவர்
* மற்றவர்களுடன் பழகும்போது இரக்கம், அனுதாபம், அன்பு காட்டிப் பேசுவதை, மதிப்பு குறைச்சலாக நினைக்காதீர்கள்
* சாக்குபோக்கு சொல்வதை விட, பொறுப்பேற்பதே சிறந்த தலைமைப் பண்பு
* நல்ல சந்தர்ப்பங்கள் வரும் வரை காத்திருக்காமல், அவற்றை நாம் உருவாக்கிக் கொள்வது தான் நல்லது
* வேகமாக முன்னேற முயன்றால் தனியாக இரு; நீண்ட முன்னேற்றத்திற்கு முயன்றால், மற்றவர்களை துணைகொள்
* வேலை - வாழ்க்கை சமன்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை; வேலை - வாழ்க்கை ஒருங்கிணைப்பே சிறந்த முன்னேற்றத்திற்கு அடிகோலும். வேலையையும், வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக, திருப்தியாக அமைத்துக் கொண்டால், ஒன்றை மற்றொன்று முன்னேற்ற உதவும்.
லண்டனில் ஒருமுறை அவர் ஆற்றிய உரையிலிருந்து..
* உங்கள் வாரிசுகளுக்கு பணம் சம்பாதிக்கக் கற்றுத் தருவதை விட, மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொடுங்கள்; அது வாழ்க்கையை மதிப்பு உள்ளதாக ஆக்கும்
* உணவை மருந்து போல உண்ணுங்கள்; இல்லையெனில், மருந்தே உங்கள் உணவாகி விடும்
* ஒருவர், உங்களை மிகவும் நேசிப்பவராக இருந்தால், உங்களை விட்டுப் பிரிய 100 காரணங்கள் இருந்தாலும், ஒரே ஒரு நல்ல காரணத்திற்காக, உங்களை விட்டு நீங்காமல் இருப்பார்
* மனிதனாக இருப்பதற்கும், மனிதத்தன்மையுடன் இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு; மிகச்சிலர் மட்டுமே அதைப் புரிந்து கொள்கின்றனர்
* நீங்கள் பிறக்கும்போது உங்கள் மீது அனைவரும் அன்பு கொள்வர்; இறக்கும்போதும் அப்படித்தான். இடைப்பட்ட காலத்தில் என்ன வருகிறதோ அதைக் கையாள நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
* உலகின் மிகச்சிறந்த ஆறு மருத்துவர்கள்: சூரிய ஒளி, ஓய்வு, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, நண்பர்கள். வாழ்நாள் முழுதும் இவர்களை நல்லநிலையில் வைத்துக் கொள்ளுங்கள்; வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்
* சந்திரனைப் பார்க்கும்போது, கடவுளின் அழகைக் காண்பீர்கள்; சூரியனைப் பார்க்கும்போது கடவுளின் சக்தியைக் காண்பீர்கள்; கண்ணாடியைப் பார்த்தால், கடவுளின் மிகச் சிறந்த படைப்பைப் பார்ப்பீர்கள்! எனவே, நீங்கள் உங்களை நம்ப வேண்டும்!
* நாமெல்லாம் சுற்றுலா பயணியர்; கடவுள் நம் டிராவல் ஏஜன்ட்; நாம் எப்படிச் செல்ல வேண்டும், எங்கே செல்ல வேண்டும், எந்த இடத்தை அடைய வேண்டும் என்பதை அந்த டிராவல் ஏஜன்டே ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்.

