முன்னாள் அதிகாரிகளுக்கு 'குட் பை': ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி
முன்னாள் அதிகாரிகளுக்கு 'குட் பை': ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி
ADDED : நவ 24, 2024 11:24 PM

சென்னை: தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், பல்வேறு பொறுப்புகளில் உள்ள, ஓய்வு பெற்ற சி.எம்.டி.ஏ., அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் நிறைவேற்றப்பட்டது.
தயக்கம்
இந்த சட்டத்தை அமல்படுத்த, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டன.
இதற்கான நிர்வாக அமைப்பை ஏற்படுத்த, பல பதவிகள் மற்றும் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்ப நிலை என்பதால் புதிதாக உயர் அதிகாரிகளை நியமிக்க தயக்கம் ஏற்பட்டது.
இதனால், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அனுமதியுடன், சி.எம்.டி.ஏ.,வில் இருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளுக்கு, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பணி வழங்கப்பட்டது.
செயலர், சட்ட அலுவலர், கூடுதல் இயக்குனர் உள்ளிட்ட உயர் பதவிகளில், ஓய்வு பெற்ற சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மறுநியமனம் செய்யப்பட்டனர்.
இவர்கள் தங்களுக்கு பிடித்தமான ஓய்வு பெற்ற எழுத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை பணியாளர்களையும் இங்கு நியமித்தனர். இதனால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில், புதியவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவற்றில், புதிய பணியிடங்களை நிரப்ப அரசு வழங்கிய அனுமதி காலாவதியாகும் சூழல் ஏற்பட்டது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, இதை ஆணையத்திடம் சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து, புதிய பணியாளர்களை நியமிக்கும் பணிகளை ஆணையம் துவக்கி உள்ளது.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரியல் எஸ்டேட் ஆணைய தலைவராக ஷிவ்தாஸ் மீனா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பினர் இடங்களும் நிரப்பப்பட்டன.
புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வந்த நிலையில், உயர் பொறுப்புகளில் உள்ள, ஓய்வு பெற்ற அதிகாரிகளை, திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு பதவி மற்றும் பணியிடத்திலும் புதிய அலுவலர்களை நியமிக்கும் பணிகள் துவங்கி விட்டன.
கூடுதல் செலவு
உதாரணமாக, ஒரு எழுத்தர் பணியிடத்தில் புதிய நபரை நியமித்தால், அவருக்கான அடிப்படை ஊதியம், 30,000 ரூபாய் தான் வரும். ஆனால், அந்த இடத்தில் ஓய்வு பெற்ற அலுவலரை நியமிப்பதால், அவர் ஓய்வு பெறும் போது பெற்ற சம்பளம் வழங்கப்படுகிறது.
இதனால், ஆணையத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, செலவு குறைப்பு, பணி திறன் மேம்பாடு அடிப்படையில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.