தைப்பூச நாளில் பத்திரப்பதிவுக்கு மறுப்பு; வருவாய் இழப்புக்கு யார் பொறுப்பு?
தைப்பூச நாளில் பத்திரப்பதிவுக்கு மறுப்பு; வருவாய் இழப்புக்கு யார் பொறுப்பு?
ADDED : பிப் 03, 2026 04:27 AM

சென்னை: தமிழக அரசு உத்தரவிட்டும், தைப்பூச நாளான நேற்று முன்தினம், பத்திரப்பதிவு பணிகள் நடக்கவில்லை. இதனால், பதிவுத்துறைக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்து உள்ளது.
தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அதற்கான பத்திரங்களை முகூர்த்த நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர்.
இதேபோல், தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற நாட்களில், பத்திரப்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதை கருத்தில் வைத்து, அந்த மூன்று நாட்களில், பத்திரப்பதிவு மேற்கொள்ள, தமிழக அரசு 2021ல் உத்தரவிட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நாட்கள், ஞாயிற்றுக் கிழமையில் வந்தாலும், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு தைப்பூசம், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தது. அன்று சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு இருக்க வேண்டும்.
அரசாணை இருந்தாலும், தைப்பூச நாளில் சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட, பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அத்துடன், கூடுதல் டோக்கன் வழங்கவும், பதிவுத்துறை ஐ.ஜி., அனுமதி வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தைப்பூச நாளில் பத்திரப்பதிவு நடக்கவில்லை.
இதுகுறித்து சார் - பதிவாளர்கள் கூறுகையில், 'தைப்பூச நாளில், சார் - பதிவாளர் அலுவலகங்களை திறக்க, பதிவுத்துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுமதி அளிக்கவில்லை' என்றனர்.
நேற்று பதிவுக்கு அனுமதிக்காததால், பதிவுத்துறைக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை, அவரிடம்தான் கேட்க வேண்டும் என, சார் - பதிவாளர்கள் தெரிவித்தனர்.

