அறிவித்த ரயில்களை இயக்க மறுப்பு! தெற்கு ரயில்வே அதிகாரிகளின் தீவிரமான பாரபட்சம்
அறிவித்த ரயில்களை இயக்க மறுப்பு! தெற்கு ரயில்வே அதிகாரிகளின் தீவிரமான பாரபட்சம்
ADDED : ஏப் 27, 2024 04:53 AM

கோவையிலிருந்து கேரளாவுக்கு கோட்டத்தலைநகரம் மாற்றப்பட்டு, பல ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கோவைக்கு அறிவித்த ரயில்களை இயக்குவது மட்டும் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியுள்ள தெற்கு ரயில்வேயில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல நகரங்கள், நீண்டகாலமாக பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்தன.
கைநழுவியது
இங்கு கிடைக்கும் வருவாயைக் கொண்டு, கேரளாவில் ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்திய கோட்ட அதிகாரிகள், கொங்கு மண்டல நகரங்களைப் புறக்கணிப்பதாக புகார் எழுந்தது.
அதனால் வெடித்த போராட்டத்தின் விளைவாகவே, சேலம் ரயில்வே கோட்டம் உதயமானது. உண்மையில், இந்த கோட்டம், சுதந்திரத்துக்கு முன்பு, 1861லிருந்து கோவை போத்தனுாரை தலைமையிடமாகக் கொண்டே செயல்பட்டது.
கடந்த 1953ல் தான், இங்கிருந்து ஒலவக்கோடுக்கு மாற்றப்பட்டு, பின்பு பாலக்காடு ரயில்வே கோட்டமானது. முதலில் இங்கிருந்து கோட்டத்தலைநகரம் கைநழுவியது.
அதற்குப் பின், கொங்கு மண்டல ரயில் தேவைகள், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, பல ரயில்கள் கேரளாவுக்கு நீட்டிக்கப்பட்டன. கடந்த 1864 லிருந்து பெங்களூரிலிருந்து கோவை வரை இயக்கப்பட்ட 'ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்' ரயில் தான், முதல் முதலாக 1960ல் எர்ணாகுளத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அதிலிருந்து கோவை ரயில்களை, கேரளாவுக்கும், தேவைக்கேற்பவும் நீட்டிப்பது வாடிக்கையாகி விட்டது.
கடந்த 1940களில், மேட்டுப்பாளையத்திலிருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்பட்ட 'டீ கார்டன் எக்ஸ்பிரஸ்', அதன்பின் முதலில் திருச்சி வரையும், பின்பு நாகூர் வரையும், 2011லிருந்து காரைக்கால் வரையும் நீட்டிக்கப்பட்டது. அதேபோல, 1988 லிருந்து 2008 வரையிலும் கோவை-பெங்களூரு இடையே இயக்கப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 2008 லிருந்து எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டது.
இப்போது கோவை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வரும் 'டபுள் டெக்கர்' ரயிலான உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை, பாலக்காடுக்கு நீட்டிப்பு செய்வதற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
நிராகரிப்பு
விரைவில் இது நடைமுறைக்கு வருவது உறுதியாகியுள்ளது. 2019 வரை, திருச்செந்துார்-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்ட திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில், 2021 லிருந்து பாலக்காடுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலை கோவைக்கு நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கை, வேண்டுமென்றே நிராகரிக்கப்பட் டுள்ளது.
கோவையிலிருந்து சென்னை எக்மோருக்கு இயக்கப்பட்ட ரயில், வடக்கு கேரளா வழியாக மங்களூரு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. திருச்சி-கோவை பாசஞ்சர் ரயில், ஈரோடு-கோவை பாசஞ்சர் ரயில், இரண்டையுமே, கோவையிலிருந்து பாலக்காடுக்கு தள்ளிக் கொண்டு போய் விட்டனர்.
இதற்கு, மெமு பராமரிப்புப் பணிமனை, பாலக்காட்டில் தான் இருப்பதே காரணமாகச் சொல்லப்படுகிறது.
பெருமளவில் வருவாய் ஈட்டித்தரும் கோவையில், இந்த பணிமனையை உருவாக்குவதில் என்ன தடங்கல் உள்ளது என்பதற்கு எந்த பதிலும் இல்லை. இப்படி கோட்டத்தலைநகரம் துவங்கி, ஏராளமான ரயில்கள் வரை, கோவையிலிருந்து கேரளாவுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக, பாலக்காடு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை கோவைக்கு நீட்டிப்பதாகக் கூறப்பட்ட அறிவிப்பு முதல், கோவைக்கு அறிவித்த பல ரயில்கள் இதுவரை இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட, பழைய ரயில் சேவைகளும் மீண்டும் துவக்கப்படவில்லை. தெற்கு ரயில்வே அதிகாரிகளின் தீவிரமான பாரபட்சமே, அத்தனைக்கும் காரணம்.
-நமது சிறப்பு நிருபர்-

