'காதல் திருமணத்துக்கு மறுப்பது தற்கொலைக்கு துாண்டியதாகாது': உச்ச நீதிமன்றம்
'காதல் திருமணத்துக்கு மறுப்பது தற்கொலைக்கு துாண்டியதாகாது': உச்ச நீதிமன்றம்
UPDATED : ஜன 27, 2025 09:48 AM
ADDED : ஜன 27, 2025 05:16 AM

புதுடில்லி: தன் மகனின் காதல் திருமணத்துக்கு தாய் மறுப்பு தெரிவிப்பதை, காதலியை தற்கொலைக்கு துாண்டிய குற்றமாக கருத முடியாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு வழக்கில், காதலனின் தாய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவில் கூறியதாவது:
இந்த வழக்கில், தன் மகனின் காதல் திருமணத்துக்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாயின் ஒப்புதல் இல்லாததால் திருமணம் செய்ய முடியாது என்று காதலன் கூறியதால், காதலி தற்கொலை செய்துள்ளார்.
காதலனின் தாய் கூறிய வார்த்தைகளே, காதலியை தற்கொலை செய்து கொள்ள துாண்டியதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து சாட்சியங்களும் இதை நிரூபிப்பதாக உள்ளன. ஆனாலும், காதலனின் தாய் மறுத்ததையே, காதலி தற்கொலை செய்யத் துாண்டியதாக கூறுவதை ஏற்க முடியாது. அவருக்கு மாற்று வாய்ப்புகள் இருந்துள்ளன.
மேலும், தற்கொலை செய்த பெண்ணின் பெற்றோர் தான், இந்த காதலுக்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
காதலனின் தாய் மறுப்பு மட்டுமே தெரிவித்துள்ளார். காதலைத் தொடரக் கூடாது என்றோ, பார்க்கக் கூடாது என்றோ எந்த ஒரு நெருக்கடியும் அவர் கொடுக்கவில்லை.
திருமணம் செய்யாவிட்டால், தற்கொலை செய்வதாக காதலி தான் மிரட்டியுள்ளார். அப்படியும் காதல் திருமணத்துக்கு காதலனின் தாய் ஏற்கவில்லை. அதையே, தற்கொலைக்கு துாண்டியதாக கூற முடியாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

