9 சதவீதம் கட்டணம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு மொட்டை போடும் பதிவுத்துறை
9 சதவீதம் கட்டணம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு மொட்டை போடும் பதிவுத்துறை
UPDATED : ஜூன் 21, 2025 02:19 AM
ADDED : ஜூன் 21, 2025 02:18 AM

சென்னை: சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் போது, பாதுகாப்புக்கான 'ஹோலோகிராம் ஸ்டிக்கர்' ஒட்டாமல் விடுபடும் பத்திரங்களால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சார் - பதிவாளர் அலுவலகத்தில், பத்திரங்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்காக பயன்படுத்தப்படும் முத்திரை தாள்களில் போலிகள் வராமல் இருக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முத்திரைத்தாள்களின் வரிசை எண்களை, அதை விற்கும் முகவர்கள், 'ஆன்லைன்' முறையில் பதிவுத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வரிசை எண் அடிப்படையில், முத்திரை தாள்கள் சரிபார்க்கப்படுவதால் போலிகள் தவிர்க்கப்படுகின்றன.
வரிசை எண்
இதற்கு அடுத்தபடியாக, போலி ஆவண மோசடியை தவிர்க்க, சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரங்களுக்கு, 'ஹோலோகிராம் ஸ்டிக்கர்' ஒட்டும் நடைமுறை அமலுக்கு வந்துஉள்ளது.
சொத்து பத்திரங்கள், திருமண பதிவு சான்றிதழ் கள் போன்றவற்றில், 'ஹோலோகிராம் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது.
ஒவ்வொரு பத்திரத்திலும் சார் - பதிவாளர் கையெழுத்திடும் போது, பாதுகாப்புக்கான ரகசிய குறியீடுகள் அடங்கிய ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படும். அந்த ஸ்டிக்கர்களில் வரிசை எண் பராமரிக்கப்படும்.
தினசரி நடந்த பத்திரப்பதிவு எண்ணிக்கையுடன், ஹோலோகிராம் ஸ்டிக்கர் வரிசை எண்ணிக்கை ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். இதில் வேறுபாடு தெரியவந்தால், பத்திரங்கள் சரிபார்க்கப்படும்.
இந்நிலையில், சில அலுவலகங்களில் பதிவு முடிந்த பத்திரங்களில், ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டாமல் விடுபட்டது தெரியவந்துள்ளது. வழக்கமாக பத்திரங்களை தணிக்கை செய்யும் போது, இந்த விபரம் தெரியவரும்.
அலைக்கழிப்பு
ஆனால், சார் - பதிவாளர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதுஇல்லை. அதேநேரம், வங்கிக்கடன் போன்ற தேவைகளுக்கு செல்லும் போது, பத்திரம் மீது சந்தேகம் எழுகிறது.
சில இடங்களில், கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க, வங்கிகள் இதையே ஒரு காரணமாக பயன்படுத்துகின்றன.
இவ்வாறு பாதிக்கப்படும் மக்கள், சார் - பதிவாளரிடம் சென்றால், இதற்கு தீர்வு கிடைக்காது. மாவட்ட பதிவாளரிடம் விண்ணப்பித்து, அவர் ஒப்புதல் அளித்தால் தான், சார் - பதிவாளர்கள் அந்த பத்திரத்தில் ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி, மீண்டும் பதிவேற்ற வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, சொத்து வாங்குவோர் அதன் மொத்த மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் என, 9 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த அளவுக்கு கட்டணம் வாங்கும் போது, ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டுவதில், சார் - பதிவாளர்கள் அலட்சியம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
அறிவிப்பு வேண்டும்
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
பத்திரங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இதில், கூடுதல் வசதியாக மட்டுமே, ஹோலோகிராம் ஸ்டிக்கரை பார்க்க வேண்டும்.
சொத்து பரிமாற்றத்தின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய, வில்லங்க சான்று போன்ற வழிமுறைகள் இருந்தாலும், ஹோலோகிராம் ஸ்டிக்கர் விடுபடுவதை பதிவுத் துறை தவிர்க்க வேண்டும்.
இப்பணியில் உள்ள ஊழியர்கள் முறையாக வேலை செய்கின்றனரா என்பதை, சார் - பதிவாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், பத்திரங்களை பெறும் மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை, அந்தந்த அலுவலக அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக தணிக்கை ஆய்வு வாயிலாக தான், ஹோலோகிராம் ஸ்டிக்கர் விடுபடுவது தெரியவருகிறது. இதுபோன்ற விடுதல்கள் வராமல் தடுக்க, சார் - பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதில், தவறு செய்யும் சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.