வீடு விற்பனை ஒப்பந்த பதிவு: அமலாகிறது புதிய மாற்றம்
வீடு விற்பனை ஒப்பந்த பதிவு: அமலாகிறது புதிய மாற்றம்
ADDED : ஜன 13, 2024 05:38 AM

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனையின் போது, நிலத்தின் பங்கு மற்றும் கட்டடத்துக்கு என, தனித்தனி பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.
நிலம் மற்றும் கட்டட மதிப்பை, ஒரே பத்திரத்தில் குறிப்பிட்டு, பதிவு செய்வது கட்டாயமாகி உள்ளது. இதற்காக, தெரு வாரியாக கட்டடங்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கட்டுமான திட்டம் துவங்கும் நிலையில், வீடு விற்பனை செய்யும் போது, நிலம் மட்டுமே தயாராக இருக்கும். கட்டப்படாத நிலையில், கட்டடத்தின் மதிப்பை பத்திரத்தில் எப்படி குறிப்பிடுவது என்ற குழப்பம் எழுகிறது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள நடைமுறையை பின்பற்றியே, ஒரே பத்திரத்துக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அங்கு கடைப்பிடிக்கப்படும் பிற வழிமுறைகளையும் அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவோர், ஆரம்ப நிலையில் விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்கின்றனர். இதற்கு, 20,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டுமான பணிகள் முடியும் நிலையில், நிலம், கட்டட மதிப்புகள் குறிப்பிடப்பட்டு, கிரைய பத்திரம் பதிவு செய்யப்படும். அப்போது, விற்பனை ஒப்பந்த பதிவுக்கு செலுத்திய கட்டணம் கழிக்கப்படும்.
இதுபோன்ற நடைமுறையை, தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.