பயணியர் கப்பல் சேவை; இலங்கைக்கு மீண்டும் துவக்கம்?
பயணியர் கப்பல் சேவை; இலங்கைக்கு மீண்டும் துவக்கம்?
UPDATED : ஆக 08, 2024 03:52 AM
ADDED : ஆக 08, 2024 01:02 AM

நாகப்பட்டினம்: இலங்கை மற்றும் இந்தியா இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட கப்பல் சேவையை துவக்க, நாகையில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு சிறிய பயணியர் கப்பல் இயக்க பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்க முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து நாகை துறைமுகம் 5 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் நவீனப்படுத்தப்பட்டது. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 150 பயணியர் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்ட 'சிரியா பாணி' என்ற சிறிய கப்பல் பயணத்தை கடந்த ஆண்டு அக்.,14ம் தேதி, பிரதமர் மோடி, காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். கடலின் பருவ மாற்றத்தால் சில தினங்களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடந்த மே 13ம் தேதி முதல், மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கப்பல் சேவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 150 பேர் பயணிக்கும் வகையில், குளிர்சாதன வசதியுடன், 'சிவகங்கை' என்ற கப்பல் நேற்று முன்தினம், நாகை துறைமுகம் வந்தது. கப்பல் சேவை துவங்கும் தேதி, பயண முன்பதிவு தேதி அறிவிக்கப்படவில்லை.
நாகை, துறைமுகத்திற்கு கப்பல் வந்ததையடுத்து, விரைவில் இரு நாட்டிற்கிடையில் போக்குவரத்து சேவை விரைவில் துவங்கும் என்ற நம்பிக்கை சுற்றுலா பயணியரிடையே ஏற்பட்டுள்ளது.