'வெறுப்பு பேச்சுகளை ஒடுக்க கிராமங்களில் சமூக கமிட்டி தேவை': ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி யோசனை
'வெறுப்பு பேச்சுகளை ஒடுக்க கிராமங்களில் சமூக கமிட்டி தேவை': ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி யோசனை
ADDED : செப் 22, 2025 01:44 AM

''மத நல்லிணக்கத்தை காக்கவும், வெறுப்பு பேச்சுகளை ஒடுக்கவும், ஒவ்வொரு கிராமத்திலும், அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் கமிட்டி அமைக்க வேண்டும்,'' என, சமூக சமத் துவ படை தலைவரும், தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான பி.சிவகாமி வலியுறுத்தினார்.
வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்களை ஒடுக்குவது குறித்த கருத்தரங்கு டில்லியில் நேற்று நடந்தது. இதில், அவர் பேசியதாவது:
வெறுப்பு பேச்சுகளை ஒடுக்கி, சமூகத்தில் நல்லிணக்கத்தை காக்க, ஒரு புதிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். வெறுப்பு பேச்சுகளை ஒடுக்குவதற்கான தீர்வு அதிகார வர்க்கத்திடம் இல்லை. பொதுமக்களிடம் இருந்தும், அவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் இருந்தும் வெளிப்பட வேண்டும்.
வெறுப்பு பேச்சு மற்றும் குற்றங்கள் அரசியலுடன் மட்டுமே தொடர்புடையதா என்றால் அது, அதை விட ஆழமானது. வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பஞ்சாயத்து ராஜ் ஆட்சி போன்றவை உயர் ஜாதியினரால் கட்டமைக்கப்பட்டவை. எந்த கேள்வியும் இல்லாமல், அவை பிரபலமாக்கப்படுகின்றன.
துாத்துக்குடியில் நான் கலெக்டராக பணியாற்றிய போது, உயர் ஜாதி அதிகாரி ஒருவர் என்னை பட்டியலின கிராமத்திற்குள் செல்லவிடாமல் தடுத்தார். ஏனெனில், அங்கு இருக்கைகள் முறையாக இருக்காது என்ற அற்பமான காரணத்தை கூறினார்.
அதேபோல், 2009ல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட போது, பட்டியலின சமூகத்தினர் வசிக்கும் கிராமத்தில் பிரசாரம் செய்வதற்கு, என்னுடன் அரசியல் முகவர்களே வர மறுத்து விட்டனர்.
ஒவ்வொரு கிராமத்திலும், அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் கமிட்டி அமைக்க வேண்டும். அப்போது தான் வெறுப்பு பேச்சுகளை ஒடுக்க முடியும். சமூக நல்லிணக்கத்தையும் காக்க முடியும்.
இவ்வாறு சிவகாமி பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -