பட்டா பிழைகளை சரி செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம்
பட்டா பிழைகளை சரி செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம்
ADDED : டிச 18, 2024 04:55 AM

சென்னை : பட்டாக்களில் காணப்படும் பரப்பளவு உள்ளிட்ட பிழைகளை சரி செய்வது தொடர்பான கோப்புகள், வருவாய் துறையில் கிடப்பில் போடப்படுவதால், கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதில், பத்திரம், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், கணினியில் உள்ளீடு செய்யப்படும் நிலையில், பரப்பளவு, பெயர் உள்ளிட்டவற்றில் வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த பிழைகளை சரி செய்தால் மட்டுமே, விண்ணப்பத்தை கணினி ஏற்கும்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படும் பட்டாக்களில், பரப்பளவு உள்ளிட்ட விபரங்கள் பிழையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வருவாய் துறை நடைமுறைகளின் அடிப்படையில், இதுபோன்ற பிழைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் திருத்தம் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான வருவாய் கோட்டாட்சியர்கள், இதுபோன்ற பிழைகளை சரி செய்வது தொடர்பான முடிவை எடுக்காமல், கிடப்பில் போடுவதாக புகார் எழுந்துள்ளது.
அனுமதி பாதிப்பு
இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: கட்டுமான திட்ட அனுமதி உள்ளிட்ட பணிகள், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதனால், பட்டா போன்ற ஆவணங்கள் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், 'ஆன்லைன்' முறையில் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
பொதுவாக, பத்திரங்களில் சதுர அடி அடிப்படையிலும், பட்டாவில், 'ஏர்' கணக்கிலும் நிலத்தின் பரப்பளவு குறிப்பிடப்படுகிறது. ஒரு ஏர் என்பது, 1076 சதுர அடி. இதில், சிறிய அளவு வேறுபாடு இருக்கும். இதனால், பத்திரத்தை விட பட்டாவில், 50 முதல், 70 சதுர அடி வரை குறைந்து காண வாய்ப்புள்ளது.
இதை சரி செய்து கொடுக்க விண்ணப்பித்தால், அதில் கோட்டாட்சியர்கள் விசாரணையே மேற்கொள்வதில்லை. தங்களுக்கு வேறு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி, அலட்சியம் காட்டுகின்றனர்.
பட்டா பிழைகளை சரி செய்ய வேண்டியது, தற்போது மிக முக்கியமானதாக உள்ளது. வருவாய் துறை அதிகாரிகள், இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.