சீமானை இயக்கும் வலதுசாரிகள்: பிரிந்து சென்றோர் குற்றச்சாட்டு
சீமானை இயக்கும் வலதுசாரிகள்: பிரிந்து சென்றோர் குற்றச்சாட்டு
ADDED : நவ 27, 2024 05:31 AM

திருச்சி: ''வலதுசாரி சித்தாந்தம் கொண்டோரே, சீமானை இயக்குகின்றனர்,'' என, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தினர் குற்றம்சாட்டினர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சும், செயல்பாடுகளும் பிடிக்காததால், சிலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அந்த கட்சியில் இருந்து விலகியவர்கள் ஒன்று சேர்ந்து, 'தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்' துவக்கி உள்ளனர். புதிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, வெற்றிக்குமரன் ஆகியோர், திருச்சியில் அளித்த பேட்டி:
இந்த இயக்கம் சார்பில், இன்று, திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்த 50 சதவீதத்துக்கும் அதிகமான மாவட்ட செயலர்கள், இந்த இயக்கத்தில் உள்ளனர்.
சீமானை சிலர் இயக்கி வருகின்றனர் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்ததும்தான், அவர் மீது எங்களுக்கெல்லாம் சந்தேகம் வலுத்தது. நடிகர் ரஜினியை, அவர் வெளிப்படையாக சந்தித்த பின், அவரை இயக்கும் சக்தி வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் என்பது அப்பட்டமாக தெரிந்து விட்டது. இவரே பலருக்கு ஸ்லீப்பர் செல்களாக இருந்துகொண்டு, எங்களை ஸ்லீப்பர் செல் என்று சொல்லி, தன் தவறை மறைக்கப் பார்க்கிறார்.
சீமானின் செயல்பாடுகளால், அவரை முழுதுமாக நம்பிக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும், அவர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். எல்லா விஷயங்களிலும் மாறுபாடாக நடந்து கொள்ளும் சீமான், திராவிட கட்சிகளை குறைகூறும் தகுதியை இழந்து விட்டார். இனி அவரால், வெற்றி பெறவே முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.