சிவன் கோவிலுக்கு 'ரோபோடிக்' யானை: கனடாவில் வசிக்கும் இந்திய பெண் வழங்கினார்
சிவன் கோவிலுக்கு 'ரோபோடிக்' யானை: கனடாவில் வசிக்கும் இந்திய பெண் வழங்கினார்
ADDED : பிப் 04, 2024 02:56 AM

கூடலுார் தேவர்சோலை சிவன் கோவிலுக்கு, வன விலங்குகள் நல பெண் ஆர்வலர், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ரோபோடிக்' யானை பொம்மையை வழங்கினார்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சங்கீதா ஐயர். இவர் தற்போது கனடா நாட்டில் வசித்து வருகிறார். விலங்குகள் நல ஆர்வலரான இவர், ஆசியாவில் யானைகளை பாதுகாக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் கூடலுார் தேவர்சோலை சிவன் கோவிலுக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோபோடிக் யானை பொம்மையை தானமாக வழங்கியுள்ளார்.
இதற்கான நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. கோவில் கமிட்டி செயலர் ரங்கசாமி வரவேற்றார். கமிட்டி தலைவர் பாலகோபால் தலைமை வகித்தார். விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா ஐயர் பங்கேற்று, ரோபோடிக் யானை பொம்மையை கமிட்டியிடம் ஒப்படைத்தார்.
கோவிலுக்கு வழங்கப்பட்ட ரோபோடிக் யானை பொம்மை நகர்ந்து செல்லும் வகையில், கால்களில் சக்கரம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், கண் சிமிட்டு வதுடன், தும்பிக்கை மூலம் தீர்த்தம் தெளிப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சங்கீதா ஐயர் கூறுகையில், ''பல கோவில்களில் யானைகளை சங்கிலியில் கட்டி துன்புறுத்துகின்றனர். அதை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். யானைகள் கோவில்களில் வாழக்கூடியவை இல்லை; வனத்தில் வாழக்கூடியவை. கேரளாவில் கோவில் யானைகள் அதிகம் உயிரிழக்கின்றன.
''ஆனால், தமிழகத்தில் தமிழக அரசும், நீதித் துறையும் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. இதனால், இங்கு துன்புறுத்துவது அதிகம் இல்லை.
''யானைகள் துன்புறுத்தலை தடுக்கவே, கோவில்களில் ரோபோட்டிக் யானை பொம்மை பயன்படுத்தும் போது, நம்முடைய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்,'' என்றார்
- நமது நிருபர் - .