சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: கேரள தேவசம்போர்டு அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: கேரள தேவசம்போர்டு அறிவிப்பு
ADDED : நவ 03, 2024 12:49 AM

கோட்டயம்: ''மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்,'' என, கேரள தேவசம்போர்டு அமைச்சர் என்.வி.வாசவன் தெரிவித்தார்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், உலக புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில், இக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
இந்தாண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக, வரும் 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் மாநில அரசு செய்து வருகின்றன.
அறிமுகம்
இந்நிலையில் நேற்று, கோட்டயத்தில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள தேவசம்போர்டு அமைச்சர் என்.வி.வாசவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தாண்டு சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பக்தர்களுக்கு காப்பீடாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
மருத்துவ வசதிகள்
யாத்திரையின் போது பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏதாவது ஏற்பட்டால், அதற்கு பின் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்யும். நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன. பக்தர்கள் சுமூகமாக தரிசனம் செய்ய கோவிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த காலத்தில், 13,600 போலீசார், 2,500 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். பக்தர்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் போதிய குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய, நீர் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
நிலக்கல், சன்னிதானம் போன்ற இடங்களில் மருத்துவ வசதிகளை சுகாதாரத்துறை செய்துள்ளது. பம்பா, அப்பாச்சிமேடு, சன்னிதானம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளிலும் சிறப்பு இதய சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, 15 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, 20 லட்சம் அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.