இந்தியாவின் திசைபோக்கை தீர்மானிக்கும் ஆர்.எஸ்.எஸ்.,
இந்தியாவின் திசைபோக்கை தீர்மானிக்கும் ஆர்.எஸ்.எஸ்.,
UPDATED : அக் 16, 2024 05:34 AM
ADDED : அக் 16, 2024 01:45 AM

ஆர்.எஸ்.எஸ்., என்று அழைக்கப்படும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், விஜயதசமி நாளான அக்., 12-ல், 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1925ல், விஜயதசமி நாளான செப்., 27-ல், மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்.,சை துவக்கினார்.
அன்று துவங்கிய பயணம், 100 ஆண்டுகளை கடந்து உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்ட 1925ம் ஆண்டு கால கட்டத்தில், விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது.
கோல்கட்டா மருத்துவக் கல்லுாரியில் படிக்கும்போதே, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர், ஹெட்கேவார். படிப்பு முடித்ததும், நல்ல சம்பளத்தில் மருத்துவராக பணியாற்ற வாய்ப்புகள் வந்தபோதும், அதை மறுத்து, காங்கிரசில் இணைந்து, விடுதலைப் போரில் களம் இறங்கினார்.
அன்னியர்களுக்கு பாதை
எந்த விஷயத்தையும்,வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் ஹெட்கேவார், 'பல்லாயிரம் ஆண்டுகால கலாசார பாரம்பரியம் கொண்ட பாரதம், ஏன் அன்னியர்களிடம் அடிமைப்பட்டது? பல கோடி மக்கள் இருந்தும்,சில ஆயிரம் பேர் கொண்ட ஆங்கிலேயர்கள் வசம்பாரதம் சென்றது எப்படி...பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வணிகம் செய்ய வந்தவர்கள், பாரத தேசத்தை ஆட்சி செய்யும்அளவுக்கு உயர்ந்ததுஎப்படி?' என்றெல்லாம் தன் மனதிற்குள் கேள்விகளை எழுப்பி, அதற்கு விடைதேடிக் கொண்டிருந்தார்.
பாரதத்தில் வசிப்பவர்களிடம், 'இது நம் நாடு; இது நம் கலாசாரம்; அதை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இல்லை. இனம், மொழி, ஜாதி, வழிபாட்டு முறை என, பல்வேறு வகைகளில் மக்கள் பிரிந்து கிடப்பது ஆங்கிலேயர்கள்உள்ளிட்ட அன்னியர்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்து விட்டது...'இந்நிலை தொடர்ந்தால், ஆங்கிலேயர்கள் வெளியேறினாலும், வேறு நாட்டினர் நம்மை ஆள வந்து விடுவர்.நமக்கென உள்ள பாரத தேசத்தை, நம்மவர்களே ஆள வேண்டும் எனில்,இங்குள்ள அனைவருக்கும், 'இது நம் நாடு' என்ற உணர்வு வர வேண்டும்.
சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. நமக்கு நாமே ஆளும் நாடு இல்லாவிட்டால், சுயத்தை இழந்து விடுவோம்.
'நம் பாரம்பரியம், கலாசாரம், தர்மத்தை காக்க முடியாது. காலமெல்லாம் அன்னியர்களிடம் அடிமைப்பட்டு கிடக்க வேண்டியிருக்கும் என்ற உண்மையை அனைவரிடமும் உணர்த்த வேண்டும். அப்போதுதான் விடுதலை கிடைத்தாலும் பயன் தரும்' என்று நினைத்தார் ஹெட்கேவார்.அதற்கு மதம், இனம், மொழி, ஜாதி, வழிபாட்டு முறைகள், உணவு, உடை, பழக்க வழக்கங்கள் என, எந்த வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரையும் ஒருங்கிணைத்து, 'நம் தேசம்ஒரே தேசம்' என்றுஉருவாக்க முடிவு செய்தார்.
இவற்றையெல்லாம் அவர் விடுதலைக்காக போராடி சிறையில் இருந்தபோது சிந்தித்தார். விளைவு... விடுதலையாகி வந்ததும், ஆர்.எஸ்.எஸ்., என்ற அமைப்பை துவக்கினார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை விமர்சிப்போர், 'விடுதலைப் போராட்டத்திற்கும், இதற்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை' என்ற பொய்யை திரும்பத் திரும்ப சொல்வர். ஆனால்,
ஆர்.எஸ்.எஸ்., பேரியக்கம் பிறந்ததே விடுதலைப் போராட்டக் களத்தில்தான். ஹெட்கேவார் சிறையில் இருந்தபோது உதித்த சிந்தனை தான் ஆர்.எஸ்.எஸ்.,
பயிற்சி வகுப்பு
அப்போது அவருக்கு வயது, 35. உடல்நிலை குறித்து கவலை அவருக்கு இருந்தது. அதனால், 'அவ்வியக்கத்தை குறுகிய காலத்திலேயே நாடெங்கும் விரிவுபடுத்தி, பல நுாறாண்டுகளுக்கு நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.இந்த அமைப்பில் பயிற்சி பெற்றோர், நாட்டை ஆளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்' என, திட்டமிட்டார்.அதற்கு அவர் கண்டுபிடித்த வழிதான், 'ஷாகா!' தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு, பாடல், உரையாடல்... திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் நடக்கும் பயிற்சி வகுப்புதான் இது.
நாக்பூர் பகுதி காங்கிரசில் முக்கியத் தலைவராக ஹெட்கேவார் இருந்தபோதும், பெரிய மாநாடு
நடத்தியோ, பொதுக்கூட்டம் நடத்தியோ, ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்படவில்லை. நாக்பூரில், சிறு மைதானத்தில் சிறுவர்கள் இணைந்து முதல், 'ஷாகா' நடந்ததே ஆர்.எஸ்.எஸ்., துவக்கம். குழந்தை பிறந்து படிப்படியாக வளர்வது போல, துவங்கப்பட்ட பிறகே அமைப்புக்கு, ஆர்.எஸ்.எஸ்., என பெயர் சூட்டப்பட்டது; அதன்பின், மற்ற கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
துரதிர்ஷ்டவசமாக நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, தன், 50-வது வயதில் ஹெட்கேவார் காலமானார். ஆனால், அதற்கு முன்பே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டுவிட்டது. கடைசியாக ஹெட்கேவார் பங்கேற்ற நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்., முகாமில்
தமிழகத்தில் இருந்தும் இருவர் பங்கேற்றனர்.
மறைவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்.,சின் அடுத்த தலைவராக, 34 வயதான மாதவ சதாசிவ கோல்வால்கரை, ஹெட்கேவார் நியமித்திருந்தார். அவர் இளையவர் என்பதால், அவர் மீது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருக்கே நம்பிக்கையின்மை இருந்தது. துறவியான அவர், தன் செயல்பாடுகளால் ஹெட்கேவாரின் தேர்வு, 100 சதவீதம் சரி என்பதை நிரூபித்தார்.
துண்டாக்கப்பட்ட பாரத தேசம்
தேசப் பிரிவினையின் பல லட்சம் ஹிந்துக்கள் கொல்லப்பட்ட கொடூரம், மஹாத்மா காந்தி படுகொலை ஆகியவற்றால், ஆர்.எஸ்,எஸ்., கதை முடிந்து விட்டது என்றேபலரும் நினைத்தனர்.ஆனால், நெருப்பாற்றில் நீந்துவதுபோல அந்நாட்களை கடந்து, சாம்பலில் இருந்து உயிர்ப்பிப்பது போல ஆர்.எஸ்.எஸ்.,சை கோல்வால்கர் உயிர்ப்பித்தார்.இந்தியாவுடன் இணைவது ஒன்றுதான் காஷ்மீரின் தனித்தன்மையை பாதுகாக்க வழி என்பதை மன்னருக்கு
உணர்த்தி, அவரை இந்தியாவுடன் இணைய சம்மதிக்க வைத்தார்.
அன்னியர்களிடம், 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக, நாம் அடிமைப்பட்டு கிடந்தோம். விடுதலை கிடைத்தும், மதத்தின் அடிப்படையில் பாரத தேசம் துண்டாக்கப்பட்டது. மஹாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் மறைவுக்குப் பின், பண்டிட் ஜவஹர்லால் நேரு என்ற ஒற்றை குடும்பத்திடம் காங்கிரஸ் கட்சியும், ஒட்டுமொத்த நாடும் சிக்கிக் கொண்டது.
நெருக்கடி நிலை அமல்
'இதில் இருந்து விடிவே இல்லை' என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நாட்டில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சியே. நேருவுக்குப்பின், பிரதமரான அவரது மகள் இந்திரா, தன் பிரதமர் பதவிக்கு ஆபத்து என்றதும், டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட, அரசியலமைப்பு சட்டத்தை முடக்கி, நெருக்கடி நிலையை அமல்படுத்தினார்.
நேரு தலைமையிலான அமைச்சரவையில், மஹாத்மா காந்தியால் பரிந்துரைக்கப்பட்டு, அமைச்சராக இருந்தவர், சியாமா பிரசாத் முகர்ஜி. மஹாத்மா காந்தி படுகொலைக்குப் பின், காங்கிரசுக்கு மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற முடிவு செய்த அவர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோல்வால்கரை சந்தித்தார்; ஆர்.எஸ்,எஸ்., ஆதரவுடன், ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார்.
ஜனதா கட்சியில் இணைந்த ஜனசங்கம், ஜனதா ஆட்சி கவிழ்ந்த பின், பாரதிய ஜனதா கட்சியாக மறு பிறப்பெடுத்தது. 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, இன்று தொடர்ந்து
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முடியாக நிலையில் உள்ளது. 1984-க்குப் பின், காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.'காங்கிரஸ் -- காங்கிரஸ் எதிர்' என்றிருந்த இந்திய அரசியல் களம், 'பா.ஜ., - - பா.ஜ., எதிர்' என்று மாறியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், 28-க்கும் அதிகமான கட்சிகள் ஒன்றிணைந்தும், பா.ஜ.,வை வீழ்த்த முடியவில்லை. இவையெல்லாம், இந்தியாவையே புரட்டிப்போட்ட அரசியல்மாற்றங்கள்.
இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம், ஆர்.எஸ்.எஸ்., சியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்தியாயா, வாஜ்பாய், அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என, ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள்தான், ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் பா.ஜ.,வை நோக்கி சுழல வைத்துள்ளனர். இது, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்த்திய அற்புதம்.
இந்தியாவில் முதல் முறையாக கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக, நிலையான ஆட்சியாக நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார் வாஜ்பாய். அதன்பின் தான், காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி ஆட்சியை நடத்தும் துணிவு வந்தது. விடுதலை அடைந்து அரை நுாற்றாண்டுக்குப் பின், வாஜ்பாய் ஆட்சியில்தான், இந்தியாவின் மாநிலங்கள், நகரங்கள் சாலைகளால் இணைக்கப்பட்டன.
பா.ஜ.,விற்கு எதிரானவர்களாலும் பாராட்டப்பட்ட ஆட்சிதான், வாஜ்பாய் ஆட்சி. அதனால்தான், வாஜ்பாய் பிறந்த நாளான, டிச., 25, நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில், 50 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர்களுக்கு கூட அவர்களுக் குள்ளே இன்னொருவரது ஜாதி என்ன என்பது தெரியாது. அந்த அளவுக்கு எந்த வேறுபாடும் இல்லாமல், அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பை, ஆர்.எஸ்.எஸ்., இயல்பாக உருவாக்குகிறது.
தி.மு.க.,வின் தாய் அமைப்பு
வனவாசி கல்யாண் ஆசிரமம் அமைப்பு வாயிலாக, மலைவாழ் மக்கள் வாழ்வில் ஆர்.எஸ்.எஸ்., பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டைக் கொண்டாடும் இந்த தருணத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு, ஜனாதிபதி ஆகி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்ட 1925-ம் ஆண்டு காலகட்டத்தில், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, இன்றைய தி.மு.க.,வின் தாய் அமைப்பான, நீதிக்கட்சி போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. இந்த அமைப்புகள், பல கட்சிகளாக, அமைப்புகளாகபிளவுபட்டு விட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தையே இழந்து விட்டது.
ஆனால், துவங்கிய நாள் முதல், எந்த பிளவையும் சந்திக்காமல், எத்தனை எத்தனையோ நெருக்கடிகள், ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, நுாற்றாண்டை எட்டியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்., ஏனெனில், நெருக்கடி நிலைக்குப் பின், அதாவது 1977-க்குப் பின், இந்தியா செல்லும் பாதையை ஆர்.எஸ்.எஸ்., தான் தீர்மானித்தது; இனியும் தீர்மானிக்கும்.
- வானதி ஸ்ரீனிவாசன்
பா.ஜ., - எம்.எல்.ஏ., கோவை தெற்கு