மழை ஆய்வு பணியில் உதயநிதி தனி 'ரூட்'; ஆளும் கட்சி நிர்வாகிகள் 'அப்செட்'
மழை ஆய்வு பணியில் உதயநிதி தனி 'ரூட்'; ஆளும் கட்சி நிர்வாகிகள் 'அப்செட்'
ADDED : அக் 25, 2025 04:42 AM

பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், துணை முதல்வர் உதயநிதி தலைமையில், சமீபத்தில் சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்தது.
அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், உதயநிதி பேசியுள்ளதாவது:
நாம் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும். மழை பெய்த பல இடங்களுக்கு சென்றேன். தொடர் மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கொஞ்ச நேரம் வெயில் அடித்தால், அந்த நீர் வடிந்து விடும்.
மழைநீர் தேங்கும்போது, மக்கள் உங்களை அழைத்தால், உடனே அங்கு சென்று மக்களுக்கு உதவுங்கள். அப்படி அழைத்தால், மக்களுக்கு உதவி தேவை என்று அர்த்தம். யாரும் கோபத்தை காட்ட, உங்களை கூப்பிட மாட்டார்கள்.
முதல்வர், அமைச்சர்களின் கவனத்துக்கு சென்றால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று, மக்கள் நம்புகின்றனர். அந்த வகையில், இந்த மழையில் மக்களோடு மக்களாக நாம் நின்றோம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதில், 'நாம் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும்' என, உதயநிதி பேசியுள்ளார்.
ஆனால், அவரே முன்மாதிரியாக செயல்படாமல், தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில், தனியாக சென்று, மழை, வெள்ளம் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்கிறார். கட்சி நிர்வாகிகள் யாரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை என, அவரது கட்சியினர் புகார் வாசிக்கின்றனர்.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தென்சென்னை பகுதியில், நீர்வழிப் பாதைகளில் நடக்கும் சீரமைப்பு பணிகளை, உதயநிதி பார்வையிட்டார். பழைய மகாபலிபுரம் சாலை, பள்ளிக்கரணை பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அதிகாரிகளை மட்டுமே அழைத்து சென்றார்.
மாவட்ட அமைச்சர் சுப்பிரமணியன், மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள், பகுதி, வட்ட செயலர்கள் என, எந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு இல்லை.
தனி நபராக உதயநிதி சென்று வந்ததை, கட்சி நிர்வாகிகள் ரசிக்கவில்லை. உதயநிதியுடன் நாங்களும் பணியில் இருந்தால் தானே, எங்களை அதிகாரிகளும், மக்களும் மதிப்பர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதெல்லாம் முக்கியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

