மதங்களை இணைத்த சபரிமலை சன்னிதானம்! நுாற்றாண்டுக்கு முன் நடந்த ஒரு புனித சம்பவம் இதோ
மதங்களை இணைத்த சபரிமலை சன்னிதானம்! நுாற்றாண்டுக்கு முன் நடந்த ஒரு புனித சம்பவம் இதோ
UPDATED : ஜன 08, 2024 12:12 PM
ADDED : ஜன 08, 2024 01:32 AM

கேரள மாநிலத்தில் அடர்ந்த வனத்தின் மத்தியில் அமைந்துள்ள சபரிமலைக் கோவில், சர்வதேச அளவில் மிகப்பிரசித்தம். கார்த்திகை, மார்கழியில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, லட்சத்தை தாண்டுகிறது.
இக்கோவிலின் மகாத்மியம் மிகப்புனிதமானது. 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்வெட்டுடன் கூடிய கோவிலாக இருந்தது. அடர்ந்த வனத்தினுள் இருந்தது. அப்போது மலைப்பகுதியில் கால்நடையாய் சென்று, பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
கட்டுமான பணியில் சவால்
அப்போது தை மாதம், மகரஜோதிக்கு ஐந்து நாட்களே திறந்திருக்கும். இப்போது, சன்னிதிக்கு செல்லும் வழிப்பாதை, ஓரளவுக்கு மேம்படுத்தப்பட்டு விட்டாலும், பல ஆண்டுகளுக்கு முன் எவ்வித வசதிகளும் இல்லாத காலத்தில், சன்னிதியின் கட்டுமான அமைப்பு நடந்த வரலாறு மிகவும் உன்னதமானது.
மத வேறுபாடு பாராமல் பலரும், அப்பணியில் ஈடுபட்டதாக கூறுகிறார், கோவையை சேர்ந்த தேசிய விருது பெற்ற தபால் அலுவலர் ஹரிஹரன்.
அவர் கூறியதாவது:
1900களில், சபரிமலை சன்னிதானத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கோவில் சிதிலமடைந்தது. புனரமைக்க அப்போதைய திருவாங்கூர் மஹாராஜா உத்தரவிட்டார். திருவாங்கூர் சமஸ்தானம், சபரிமலை கட்டுமானத்துக்கு டெண்டர் அறிவித்தது.
இரண்டாண்டுகளாகியும் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. இருள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியில், கட்டுமானப்பணி மேற்கொள்வது சிரமம் என்பதுதான் காரணம்.
அத்தோடு, புலி, சிறுத்தை, கரடி, யானை போன்ற மிருகங்கள் அடிக்கடி வந்து செல்லும் வனப்பகுதியாகவும் இருந்தது.
அப்போது, மாவேலிக்கரையை சேர்ந்த போலச்செருக்கல் தரவாட்டை சேர்ந்த கொச்சுமோன், தாமாக முன்வந்து கட்டுமான பணி மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதற்கென்று, 450 பணியாட்களை நியமித்தார்.
அதில் ஒருவர் கூட, சபரிமலைக்கு சென்று தங்கி பணி மேற்கொள்ள முடியவில்லை. அங்கு சென்றவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.
அதை சமாளிக்க, திருவாங்கூர் மகாராஜா, சித்தா மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் இருவரை, தயார் செய்து அவ்வப்போது சிகிச்சையளித்து, உடலை தெம்பாக்கி பணிகளை மேற்கொள்ள செய்தார்.
உடல் சிறிது வலு பெற்ற பின், பணியாளர்கள் அங்கேயே கூடாரம் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி, தங்கியிருந்து பணி மேற்கொண்டனர்.
கொச்சுமோனுக்கு உதவியாக பட்டாணி காசிப், கொச்சிவீட்டில் குஞ்சுமரியா ஆகிய இருவரும் உதவியாக இருந்தனர். இதையடுத்து, கட்டுமானப்பணிகளும் மரவேலைப்பாடுகளும் வேகமாக நடந்தன. 1902ல் பணிகளை துவக்கி, 1904ல் நிறைவு செய்தனர்.
பார்வையிட்ட மகாராஜா!
கோவில் கோபுர மேற்கூரையை செம்பினாலும், அடித்தளம் பித்தளையாலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி, கொல்லத்தில் புதுக்குளங்கறா கொட்டாரத்தில், அஷ்டமுடி காயலில் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகளை, திருவாங்கூர் சமஸ்தான மஹாராஜா பார்வையிட்டு பெரும் மகிழ்ச்சியடைந்தார். மேற்கூரை அமைப்பு மாறாமல், அப்படியே சபரிமலைக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டார்.
கோபுர கட்டமைப்புக்கான மழு, கலசம், ஸ்துாலம் உள்ளிட்டவை, கோட்டயம் ஓதி மதக்கடவு என்ற நதி வழியாக, முண்டக்காயம் பாரத்தோடு எனுமிடத்தை வந்தடைந்தது. அங்கிருந்து, 450 பேர் சேர்ந்து, கரடு முரடான மலைப்பாதையில் சபரிமலைக்கு எடுத்து சென்றனர்.
மிருகங்களால் தாக்குதல்
இப்பொருட்களை சுமந்து, சபரிமலை செல்ல நான்கு மாதங்களானது. அப்போது சில இடங்களில் புலி மற்றும் காட்டு மிருகங்களால் தாக்குதல் ஏற்பட்டது.
அப்போது கொச்சுமோனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மாவேலிக்கராவில் காலமானார். அதனால், கோவில் கட்டுமான பணிகள் பாதியில் நின்றன.
இதனால் கொச்சுமோனின் மனைவி அக்கம்மா கவலையுற்றார். கணவன் கைவிட்ட பணிகளை பூர்த்தியாக்க முடிவு செய்த அவர், அப்பணிகளை செயின்ட் மேரீஸ் கத்தீட்ரல் கரியகத்தனாவிடம் ஒப்படைத்தார்.
சன்னிதானப்பணிகளை கண்காணிக்கவும், துரிதப்படுத்தவும் செங்கனுார் தாசில்தார் எம்.கே.நாராயணம்பிள்ளை, கொல்லம் பேஷ்கார் ராமராயர் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டனர்.
இப்படி கடும் போராட்டத்தின் முடிவில், பணிகள் இறுதிகட்டத்தை அடைந்தன. அப்போது பேசிய தொகையில், 31,000 ரூபாயை திருவாங்கூர் சமஸ்தானம் குறைத்துக்கொண்டது. அதனால் கொச்சுமோன் குடும்பம் கடும் சிரமப்பட்டது.
இதையறிந்த, அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான ராஜா, கொச்சுமோன் குடும்பத்துக்காக சபரிமலை சன்னிதானத்தில் நன்றிக்கடனாக உண்டியல் வைக்க உத்தரவிட்டார். ஆனால் அக்கம்மா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும், பெருந்தன்மையோடு மறுத்து விட்டனர்.
தற்போது, ஐந்தாவது தலைமுறையாக மாவேலிக்கரையில் கொச்சுமோன் மற்றும் அக்கம்மாவின் சந்ததியினர், தற்போதும் குடியிருந்து வருகின்றனர்.
இப்படி, நுாற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள், மதங்களை கடந்து புனிதத்தை தேடினர். அன்றைய மன்னர்களும், மக்களும், இறைவனுக்காக பொருளீட்ட முடியாமல், உழைப்பை சிந்தினர்.
இறைவன் ஒருவனே என்ற அசைக்க முடியாத உண்மையை, அவர்கள் அன்று உணர்ந்து இருந்ததே காரணம்!