அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சீமான் இடம் பெற சைதை துரைசாமி முயற்சி
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சீமான் இடம் பெற சைதை துரைசாமி முயற்சி
ADDED : ஏப் 14, 2025 05:38 AM

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், நாம் தமிழர் கட்சியை இடம் பெற வைக்கும் முயற்சியில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, சைதை துரைசாமி ஆதரவாளர்கள் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் சீமான் தீவிரமாக உள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில், வெற்றி கூட்டணியில் இடம் பெற்று, சட்டசபையில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், சீமானிடம் விருப்பம் தெரிவித்துஉள்ளனர்.
ஒரே காரில்
ஆனால், சீமான் தனித்து போட்டியிடவே விரும்புகிறார். அ.தி.மு.க., - பா.ஜ., காங்கிரஸ், தி.மு.க., கட்சிகளுடன் கூட்டணி இல்லை என, தொடர்ந்து கூறி வருகிறார். சீமான் நேற்று முன்தினம் இரவு, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி வீட்டிற்கு சென்றார். அதன்பின், இருவரும் ஒரே காரில் வெளியே புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், நாம் தமிழர் கட்சி இடம்பெற்றால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என, சீமானிடம், சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
வளமான கூட்டணி
ஏற்கனவே சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கையில், 'பா.ஜ., கட்சியுடன் அ.தி.மு.க., இணைந்து வளமான கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும்' என கூறியிருந்தார். அதை செயல்படுத்தும் வகையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டம் இல்லத்தில், சைதை துரைசாமி நேற்று சந்தித்தார்.
ராமதாஸ் - அன்புமணி இருவரும் சமாதானமாக செல்ல வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கூடவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சீமானையும் இடம் பெற வைக்கும்போது, கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதாலேயே, அதற்கான முயற்சியிலும் சைதை துரைசாமி தீவிரமாக இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

