சயீப் அலிகானுக்கு கத்திக்குத்து: அன்றிரவு நடந்தது என்ன?
சயீப் அலிகானுக்கு கத்திக்குத்து: அன்றிரவு நடந்தது என்ன?
ADDED : ஜன 20, 2025 04:56 AM

மும்பை : நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய குற்றவாளியை, மஹாராஷ்டிராவின் தானேவில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரது பெயர் ஷரிபுல் இஸ்லாம் சேஷாத் என்றும், அவர் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவி, மும்பையில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் கொள்ளையன் நுழைந்ததை அங்கு வேலை செய்யும் எலியாமா பிலிப் என்ற, 56 வயது பணிப் பெண் தான், முதலில் பார்த்துள்ளார். கொள்ளையன் தாக்கியதில் அவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
போலீஸ் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம்: நடிகர் சயீப் அலிகானின் பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் பணி செய்து வருகிறேன். சம்பவம் நடந்த அன்று அதிகாலை, 2:00 மணிக்கு சத்தம் கேட்டு எழுந்தேன். பாத்ரூம் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சயீப்பின் மனைவி கரீனா கபூர், தன் இளைய மகன் ஜஹாங்கிரை பாத்ரூம் அழைத்து செல்கிறார் என நினைத்து, மறுபடி உறங்கிவிட்டேன்.சற்று நேரத்தில் ஏதோ சரியில்லை என தோன்றவே, மீண்டும் எழுந்து பார்த்தேன்.
பாத்ரூமில் இருந்து ஒருவர், ஜஹாங்கிர் அறைக்குள் செல்வதை பார்த்தேன். உடனே எழுந்து நானும் ஜஹாங்கிர் அறைக்குள் சென்றேன். 'சத்தம்போட்டால் யாரும் வெளியே போக முடியாது' என, கொள்ளையன் மிரட்டினார். உடனே, ஜஹாங்கிரை துாக்க விரைந்தேன். கொள்ளையன் கையில் வைத்திருந்த தடி மற்றும் நீண்ட ஆக்சா பிளேடால் என்னை தாக்க முயன்றார். அதை தடுத்தபோது கை மணிக்கட்டு மற்றும் நடுவிரலில் பிளேடு கிழித்தது.
'உனக்கு என்ன வேண்டும்' என, கொள்ளையனிடம் கேட்டேன். 'ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும்' என்றான். நான் கூச்சலிடுவதை கேட்டு நடிகர் சயீப் அலிகானும், கரீனா கபூரும் அறைக்குள் நுழைந்தனர். அதை சற்றும் எதிர்பார்க்காத கொள்ளையன், ஆக்சா பிளேடினால் சயீப்பை சரமாரியாக தாக்கினார். அவனை தள்ளிவிட்டு, நாங்கள் அனைவரும் அந்த அறையில் இருந்து வெளியேறி, மேல் தளத்திற்கு சென்றுவிட்டோம். கொள்ளையன் அங்கிருந்து தப்பிவிட்டான்.இவ்வாறு அவர் கூறினார்.