'எம்புரான் படம் குறித்து தேவையற்ற பயத்தை சங்பரிவார் ஏற்படுத்துகிறது'
'எம்புரான் படம் குறித்து தேவையற்ற பயத்தை சங்பரிவார் ஏற்படுத்துகிறது'
UPDATED : மார் 31, 2025 11:45 AM
ADDED : மார் 30, 2025 11:23 PM

திருவனந்தபுரம்: “எம்புரான் திரைப்படம் குறித்து தேவையற்ற பயத்தை சங்பரிவார் அமைப்பு ஏற்படுத்துகிறது,” என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், 2019ல் வெளியான மலையாள படம் லுாசிபர். இதன் இரண்டாம் பாகமான எம்புரான் திரைப்படம், மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 27ம் தேதி உலகம் முழுதும் வெளியானது.
இதில், மோகன்லால், மஞ்சுவாரியார், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில், 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு ஹிந்துத்துவா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
எம்புரான் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு பால்ராஜ் படேல் என்ற பாபா பஜ்ரங்கி பெயர் வைக்கப்பட்டதும் சர்ச்சையை எழுப்பியது.
பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்ற பாபா பஜ்ரங்கி, குஜராத் கலவரத்தின் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பதால், சர்ச்சை அதிகரித்தது.
எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்க வலியுறுத்தின.
இந்நிலையில், இந்த திரைப்படத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் பார்த்தார். இதையடுத்து, எம்புரான் படம் குறித்து சமூக வலைதள த்தில் அவர் கூறியுள்ளதாவது:
நாடு இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றைப் பற்றி இந்த படம் பேசுகிறது. இது சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகளை கோபப்படுத்தியுள்ளது. வகுப்புவாதத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் கொடூரங்களை சித்தரித்ததால், வகுப்புவாதிகள் ஒரு கலைப் படைப்பை அழிக்க நினைக்கின்றனர்.
மலையாள திரையுலகை புதிய உச்சத்துக்கு அழைத்து செல்லும் இந்த படம் குறித்து தேவையற்ற பயத்தையும், வெறுப்பையும் சங்பரிவார் அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. ஒரு ஜனநாயக சமூகத்தில், குடிமக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
கலைப்படைப்புகளையும், கலைஞர்களையும் அழிக்க விடுக்கப்படும், அழைப்புகள் பாசிச மனநிலையின் புதிய வெளிப்பாடுகள். இது ஜனநாயக உரிமை மீறல்.
இவ்வாறு அவர் கூறினார்.