தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/சசிகலாவின் சவால்; சமாளிப்பாரா பழனிசாமி?

சசிகலாவின் சவால்; சமாளிப்பாரா பழனிசாமி?

சசிகலாவின் சவால்; சமாளிப்பாரா பழனிசாமி?


ADDED : ஏப் 16, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

த.வெ.க., யார் ஓட்டை பிரிக்கும் என்று தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் கவலையுடன் உள்ள நிலையில், சசிகலா கட்சியின் செயல்பாடு அ.தி.மு.க.,விற்கு கூடுதல் கவலையாக மாறியுள்ளது.

கடந்த செப்டம்பரில் அ.ம.மு.க., தலைவர் தினகரனும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் தே.ஜ., கூட்டணியில் இருந்து தாங்கள் விலகுவதாக அறிவித்தனர். தொடர்ந்து, சசிகலா- - தினகரன் - பன்னீர்செல்வம் இணைந்து ஓரணியாக தேர்தலை சந்திப்பர் என்ற எதிர்பார்ப்பு, முக்குலத்தோர் மத்தியில் பரவலாக இருந்தது. இவர்கள் மூவரும் இணைந்து களமிறங்கினால், டெல்டாவிலும், தென் மாவட்டங்களிலும் அ.தி.மு.க.,வுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என பேசப்பட்டது.

ஆனால், ஒருவருக்கு ஒருவர் மீது நம்பிக்கை இல்லாததாலும், பழைய கசப்புகளாலும் அவர்களால் உடனடியாக ஒன்றுசேர முடியவில்லை. அதேநேரம், ஒவ்வொருவரும் தனித்தனி கணக்குப்போட்டு தங்கள் அரசியல் முடிவுகளை எடுத்துக்கொண்டு இருந்தனர்.

குறிப்பாக, சசிகலாவும் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைவதற்கு ஆர்வமாக இருந்தனர். பழனிசாமிக்கு பல துாது விட்டும் கைகூடவில்லை. அதேநேரம், பா.ஜ.,விடம் இருந்து அதீத அழுத்தத்திற்கு ஆளான தினகரன், கடந்த ஜன., 21 அன்று மீண்டும் தே.ஜ., கூட்டணியில் இணைந்தார். பிப்ரவரியில், பன்னீர்செல்வமும் தி.மு.க., பக்கம் சாய்வதாக தகவல் வரவே, தானும் ஏதாவது செய்ய வேண்டும், முக்கியமாக தனக்கு தடையாக இருக்கும் பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த பிப்ரவரி 24ம் தேதி, அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை துவக்குவதாக சசிகலா அறிவித்தார்.

பிரியும் ஓட்டு



அப்போது, யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சசிகலாவால், தனி ஆளாக என்ன செய்துவிட முடியும் என்றே பழனிசாமி தரப்பு கணக்குப் போட்டது. சசிகலாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், நிலவரம் அப்படி அல்ல என்று நிரூபித்து வருகின்றன. தனது அரசியல் அனுபவத்தையும் ஜாதி பின்புலத்தையும் பண பலத்தையும் சசிகலா முழுமையாக பயன்படுத்தினார். விஜய் என்ற மாபெரும் பிம்பம் உள்ள த.வெ.க.,வேட்பாளர்களே சற்று தடுமாறிய நிலையில், எந்த பிம்பமும் இல்லாத சசிகலா, எந்த சிரமமும் இன்றி தனது கட்சி சார்பில் 71 வேட்பாளர்களை நிறுத்தினார். வேட்பாளர்களும் ஏப்பை சாப்பையான ஆட்கள் இல்லை. அனேக வேட்பாளர்கள் அரசியல் அனுபவம் உள்ளவர்கள். போட்டியிடும் தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளை ஈர்க்கக் கூடியவர்கள்.

அவர்கள் அனைவருமே, களத்தில் தங்கள் வருகையை, மக்கள் மனதில் நன்கு பதிய வைத்துள்ளனர். திருவாடானை தொகுதியில் போட்டியிடும் சுரேஷ் தேவர், இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இவர், வேட்பு மனு தாக்கல் செய்யவே 200 கார்களில் சென்றார். இது, அந்த தொகுதியில் முக்குலத்தோர் கவனத்தை நன்றாகவே ஈர்த்தது.

மேலும் சி லர், முக்குலத்தோர் மத்தியில் நன்மதிப்பும் செல்வாக்கும் பெற்றவர்கள். சாத்துார் தொகுதியில் போட்டியிடும் இசக்கி ராஜா, அங்குள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை மையப்படுத்தி பட்டியலினத்தவருக்கும் முக்குலத்தோருக்கும் நடந்த மோதலை முடித்து வைத்தவர். அதனால், அந்த ஊரி ல் அவரை தெரியாதவரே கிடையாது என்ற நிலை உள்ளது. இதுவே, இன்றைய நிலைப்படி, சசிகலா கட்சி வேட்பாளர்கள் பிரிக்கக் கூடிய ஓட்டு என, சில தொகுதிகளை உதாரணமாக குறிப்பிட்டு, அ.தி.மு.க.,வினர் சொல்லும் கணக்கு:

பெரும் சவால்



இதுவே அ.தி.மு.க., தலைமைக்கு கவலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதற்கும் மேலாக, சசிகலா பிரசாரத்திற்கு நல்ல கூட்டமும் திரள்கிறது. சமீபத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் காமராஜ் போட்டியிடும் நன்னிலம் தொகுதியில், சசிகலா பிரசாரம் செய்தபோது, 10,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஆனால், பழனிசாமி, இன்றுவரை எதையும் கண்டுகொள்ளாதவராக இருக்கிறார்.

அ.தி.மு.க., வேட்பாளர்கள், பத்திரமும் கையுமாக பணம் இல்லாமல் தடுமாறும் நிலையில், சசிகலா கட்சி வேட்பாளர்கள், நன்றாக செலவு செய்து வருகின்றனர். எந்த குறையும் இல்லாமல், சசிகலா அவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

முக்குலத்தோர் ஓட்டுகளை பெற, ஜாதி பின்புலம், பிம்பம் மற்றும் கட்சி பலம் மட்டும் இருந்தால் போதாது என்பது, 2024 லோக்சபா தேர்தலில் தினகரன் படித்த பாடம். அப்போது, தேனி தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு பிரசாரத்தின் போது அமோக வரவேற்பு இருந்தது. அதை பார்த்து, தனக்கு வெற்றி உறுதி என முடிவு செய்த அவர், சம்பிரதாயமான பணம் கொடுக்கும் சடங்கை மறந்து விட்டார். அதனால், 2.78 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

இப்போது, அ.தி.மு.க., வேட்பாளர்கள், 2024ல் தினகரன் இருந்த நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு தலைமையிடம் இருந்து போதுமான நிதி உதவி இல்லாததால், பணப்பட்டுவாடா கடைசி நேரத்தில் எவ்வளவு துாரத்துக்கு செய்ய முடியும் என்று தெரியவில்லை. அதேநேரம், தி.மு.க., மற்றும் சசிகலா வேட்பாளர்கள் அளவுக்கு கொடுக்க முடியுமா என்றும் தெரியவில்லை. இதனால், அ.தி.மு.க.,வுக்கு வரக்கூடிய கணிசமான ஓட்டுகளை சசிகலா வேட்பாளர்கள் பிரிப்பர் என்று தெரிகிறது.

நான்கு முனை போட்டியில், சில ஆயிரக்கணக்கான ஓட்டுகள் அல்லது சில நுாறு ஓட்டுகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்ற சூழலில், சசிகலா கட்சியினர் பிரிக்கும் ஓட்டுகள் தங்களை கடுமையாக பாதிக்கும் என, அ.தி.மு.க., வேட்பாளர்கள் அச்சப்படுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us