சவுக்கு சங்கர் வீடு சூறை: 5 பேரை கைது செய்து அமைதி காக்கும் சி.பி.சி.ஐ.டி.,
சவுக்கு சங்கர் வீடு சூறை: 5 பேரை கைது செய்து அமைதி காக்கும் சி.பி.சி.ஐ.டி.,
ADDED : ஏப் 02, 2025 04:50 AM

சென்னை: 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடி, கழிவு நீரை கொட்டி அசிங்கப்படுத்தியது தொடர்பான வழக்கில், ஐந்து பேரை கைது செய்ததுடன், சி.பி.சி.ஐ.டி., போலீசார் அமைதியாகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் ஊழல் நடப்பதாகவும், அதன் பின்னணியில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளதாகவும், சவுக்கு சங்கர் சில ஆதாரங்களை வெளியிட்டார்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன், சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதரமூர்த்தி தெருவில் வசித்து வரும் சங்கரின் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடினர். படுக்கை அறை உள்ளிட்ட இடங்களில், கழிவு நீர் மற்றும் மனித கழிவை கொட்டி அசிங்கப்படுத்தினர்.
இதுகுறித்து, சங்கரின் தாய் கமலா, சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் துாய்மை பணியாளர்களாக உள்ள இரண்டு பெண்கள் உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களை, எழும்பூர் நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்து விட்டது.
இந்த கைது நடவடிக்கைக்கு பின், சி.பி.சி.ஐ.டி., போலீசார் அமைதியாகி விட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைதான ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே துாய்மை பணியாளர் என்றும், 20 பேர் ஈடுபட்டுள்ள சம்பவத்தை, செல்வப்பெருந்தகை ஆதரவாளர் வாணிஸ்ரீ தான் முன்னின்று நடத்தியதாகவும், சங்கர் தரப்பில் கூறப்படுகிறது.
அது தொடர்பாக, எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும், அவரை துாண்டிவிட்ட, பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவரையும் போலீசார் விசாரிக்கவில்லை என்றும், சங்கர் தரப்பில் புகார் சொல்லப்படுகிறது. ஐந்து பேரை கைது செய்து விட்டு, கணக்கை முடித்து விட்டதாக, சி.பி.சி.ஐ.டி., மீது சங்கர் தரப்பினர் குறை கூறுகின்றனர்.

