மத்திய அரசு விடுவித்தும் பள்ளிகளுக்கு இன்னும் கிடைக்காத ஆர்.டி.இ., தொகை
மத்திய அரசு விடுவித்தும் பள்ளிகளுக்கு இன்னும் கிடைக்காத ஆர்.டி.இ., தொகை
ADDED : அக் 29, 2025 06:15 AM

மதுரை: மத்திய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கையான 25 சதவீதம் மாணவர்களுக்கான கட்டணத்தை விடுவித்தும், அதை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., கல்விப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், ஆர்.டி.இ., நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்த கல்வியாண்டிற்கான ஆர்.டி.இ., சேர்க்கையை தமிழக அரசு நிறுத்தியது.
இதையடுத்து நீதிமன்றத்தில் முறையிட்டதன் எதிரொலியாக, மத்திய அரசு அதற்கான நிதி 586 கோடி ரூபாயை, கடந்த மாதம் தமிழகத்திற்கு விடுவித்தது.
ஆனால், இதுவரை அத்தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.
இதனால் இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட 9,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பொருளாதார ரீதியாக முடங்கி, கல்விச் சூழல் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக பா.ஜ., மாநில கல்விப்பிரிவு செயலர் கல்வாரி தியாகராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் செயல்படும் 9,000க்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு 2021 - 2022, 2022 - 2023 கல்வியாண்டுகளில் ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டண தொகையை, மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
மாணவர்கள் நலன், நிர்வாக ரீதியாக பாதிக்கும் தனியார் பள்ளிகளின் நிலை குறித்து அறிந்தப் பின், அத்தொகையை மத்திய அரசு விடுவித்தது.
ஆனால் ஒரு மாதமாகியும், இதுவரை பள்ளிகளுக்கு அத்தொகை கிடைக்கவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பள்ளிகள் சந்தித்து வருகின்றன.
மாணவர்கள், பள்ளிகள் பாதிப்பைக் காட்டி, நீதிமன்றம் சென்று கட்டணத் தொகையை பெற்ற தமிழக அரசு, அதை பள்ளிகளுக்கு விடுவிப்பதில் ஏன் இழுத்தடிக்கிறது.
இதை கண்டித்து, நவ .,4ல் சென்னை டி.பி.ஐ ., வளாகம் முன், தமிழக பா.ஜ., கல்விப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

