ஐ - போன்களில் பாதுகாப்பு குறைபாடு: அரசு எச்சரிக்கை
ஐ - போன்களில் பாதுகாப்பு குறைபாடு: அரசு எச்சரிக்கை
ADDED : செப் 23, 2024 01:03 AM

புதுடில்லி: 'ஐ - போன், ஐ - பாட்' உள்ளிட்ட, 'ஆப்பிள்' நிறுவனத்தின் உபகரணங்களில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், 'செர்ட் - இன்' எனப்படும், 'கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்' வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆப்பிள் உபகரணங்களில் உள்ள பயனர்களின் முக்கிய தகவல்கள் எளிதில் கசிய வாய்ப்புள்ளன. சைபர் தாக்குதல்களுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளன.
அதன் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எளிதில் தகர்க்கப்பட கூடிய வாய்ப்புள்ளது. சேவை மறுப்பு குறைபாடுகள் ஏற்படவும், பாதுகாப்பை தகர்க்கும், 'ஸ்பூபிங்' தாக்குதல் வாயிலாக ஆப்பிள் சாதனங்கள் எளிதில் குறிவைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இந்த பாதிப்புகள், அதிகபட்ச ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். பயனர்கள் தங்கள் உபகரணங்களை தொடர் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆப்பிள் சாதனங்களை சமீபத்திய பதிப்புகளுக்கு உடனடியாக புதுப்பித்து கொள்வது பாதுகாப்பை பலப்படுத்தும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் போன்கள் மற்றும் ஐ பாட்களின் இயங்கு தளங்களான, 'ஐ - ஓஎஸ் 18 மற்றும் 17.7க்கு முந்தைய பதிப்புகளிலும், ஆப்பிள் கணினிகளான மேக் ஓஎஸ் சேனோமா வெர்ஷன் 14.7, மேக் ஓஎஸ் வென்சூரா வெர்ஷன் 13.7, மேக் ஓஎஸ் செக்வோயா வெர்ஷன் 15 ஆகியவற்றின் முந்தைய பதிப்புகளில் இந்த பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.