சீமான் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.,வில் நாளை ஐக்கியம்
சீமான் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.,வில் நாளை ஐக்கியம்
ADDED : ஜன 23, 2025 07:47 AM

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் உட்பட 3,000 பேர், சென்னையில் நாளை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைகின்றனர்.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு 8.22 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, தேர்தல் ஆணையத்தால் அக்கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட லோக்சபா தொகுதிகளில், மூன்றாம் இடத்தை பிடித்தது.
அக்கட்சியின் ஓட்டு வங்கி அதிகரித்து வருவதாலும், அதன் தலைவர் சீமான் தொடர்ந்து தி.மு.க., அரசை விமர்சித்து வருவதாலும், அக்கட்சி மீது ஆளும் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. அதனால், சீமான் கட்சி நிர்வாகிகளை இழுத்து, அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பொறுப்பை, கட்சியின் மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தியிடம், துணை முதல்வர் உதயநிதி, ஓராண்டுக்கு முன் ஒப்படைத்திருந்தார். நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதை முன்னிட்டு, 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 80 வேட்பாளர்கள், லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 10க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் 37 பேர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் என 3,000 பேர், தி.மு.க.,வில் நாளை இணைகின்றனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு பின், பல மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்கனவே தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளிலும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-நமது நிருபர் -