நீட் தேர்வு விவகாரத்தில் 'செலக்ட்டிவ் அம்னீஷியா': உதயகுமார் கிண்டல்
நீட் தேர்வு விவகாரத்தில் 'செலக்ட்டிவ் அம்னீஷியா': உதயகுமார் கிண்டல்
UPDATED : ஏப் 06, 2025 05:45 AM
ADDED : ஏப் 06, 2025 05:10 AM

மதுரை : ''நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் 'செலக்ட்டிவ் அம்னீஷியா'வாக உள்ளார்கள்,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்றம் இன்று ஸ்டாலின் மன்றமாகி விட்டது. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட, தலைவர்கள் பேசிய சட்டமன்றத்தில் இன்றைய நிலை என்ன. ஜனநாயகம் எங்கே போனது.
போலீசாரே படு கொலை செய்யப் படுகிறார்கள். அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டாமா. இன்றைக்கு கருத்து சுதந்திரத்திற்கு மிகப்பெரிய பேராபத்து வந்திருக்கிறது. தீர்மானம் கொடுத்து 10 நாட்களாக போராடுகிறோமே. அது குறித்து பேச வேண்டாமா.
தி.மு.க., நாடகங்களுக்கு மேடையாக சட்டசபை பயன்படுகிறது. இன்றைக்கு முதல்வரும், துணை முதல்வரும் நீட் தேர்வு விவகாரத்தில் 'செலக்ட்டிவ் அம்னீஷியா'வால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என மக்கள் கருதுகின்றனர். 2021 ஏப்.,4ல் அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், கல்வியில் சம வாய்ப்பை பறிக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க., நடவடிக்கை எடுக்கும் என எக்ஸ் தளத்தில் சொன்னார்.
அதே ஆண்டில் செப்.,11ல் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து தமிழ் இனத்திற்கு விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார். இதுகுறித்து 2025 ஜன.,10ல் சட்ட சபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேட்டபோது, 'மத்திய அரசுதான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்.
மாநில அரசால் ரத்து செய்ய முடியாது' என முன்னுக்கு பின் முரணாக முதல்வர் பேசியதை மக்கள் மறக்கவில்லை.
பிறகு எதற்கு அனைத்து கட்சி கூட்டம். யாரை ஏமாற்றுவதற்கு. ஸ்டாலின் தயாரித்து, உதயநிதி நடித்து வெளியிடுகிற 'நீட் தேர்வு' படம் தோல்வியைத்தான் பெறும் என்றார்.