காங்., மாவட்ட தலைவர்கள் நியமனத்தால் எம்.எல்.ஏ., சீட் கனவில் இருந்த சீனியர்கள் 'ஷாக்'
காங்., மாவட்ட தலைவர்கள் நியமனத்தால் எம்.எல்.ஏ., சீட் கனவில் இருந்த சீனியர்கள் 'ஷாக்'
ADDED : ஜன 20, 2026 04:50 AM

மதுரை: தமிழக காங்.,ல் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தால், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ., சீட்டு பெற்றுவிடலாம் என கனவில் இருந்த சீனியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பா.ஜ.,வின் தொடர் வெற்றி காரணமாக, கட்சியை பலப்படுத்த காங்., முடிவு செய்து அனைத்து மாநிலங்களிலும் செயல்படாத நிர்வாகிகளை மாற்றும் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல ஆண்டுகளாக கோலோச்சிய மாவட்டத் தலைவர்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்து, புதிய தலைவர்களை நியமிக்க அகில இந்திய காங்., பொறுப்புக் குழுவை நியமித்தது.இக்குழு மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் வட்டார அளவில் உள்ள நிர்வாகிகளிடமும் கருத்துக் கேட்டது. அவர்கள் விருப்பப்படி புதிய மாவட்ட தலைவர்கள் விவரப் பட்டியலையும் தயாரித்தது டில்லி தலைமைக்கு அனுப்பியது. பொறுப்புக் குழு பரிந்துரையை ஏற்று கட்சி ரீதியாக ஏற்படுத்தப்பட்ட 71 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களின் பெயர்களை தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் நேற்றுமுன்தினம் வெளியிட்டார்.
இதில் 90 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது கட்சிக்குள் உத்வேகத்தை கொடுத்துள்ளது என நிர்வாகிகள் உற்சாகம் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் சட்டசபை தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு மாவட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சீனியர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவையும் காங்., தேசிய தலைவர் அமைத்து விட்டார். தி.மு.க.,விடம் எத்தனை, எந்தெந்த தொகுதிகளை பெற வேண்டும் என்ற நிலையில், மாவட்ட தலைவர்களை மாற்றியது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.
இந்த நடவடிக்கையை சில மாதங்களுக்கு முன்னரோ அல்லது தேர்தலுக்கு பின்போ எடுத்திருக்கலாம். புதிய தலைவர்களுக்கு பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட அனுபவம் குறைவு. மாவட்டங்களில் உள்ள பல அமைச்சர்கள், காங்., சீனியர்களையே மதிப்பது கிடையாது. தற்போது பதவிக்கு வந்த ஜூனியர்களை அவர்கள் எப்படி மதிப்பார்கள். மாவட்ட தலைவர் பதவியில் இருந்தால் எம்.எல்.ஏ.,வாக போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு கிடைத்திருக்கும். பதவியை இழந்த பின் வாய்ப்பும் கிடைக்குமா என்பது குழப்பமாக உள்ளது. பதவியிழந்த சீனியர்கள் பாதிப்பு தேர்தல் நேரத்தில் கூட்டங்கள், பிரசார ஏற்பாடுகளில் எதிரொலிக்கும் என்றனர்.

