sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்

/

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்

6


ADDED : பிப் 20, 2026 08:00 AM

Google News

6

ADDED : பிப் 20, 2026 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் செம்பரம்பாக்கம் ஏரி, தொழிற்சாலைகள், மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறதோ என, அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரத்திற்கு சவால் விடும் இந்த அத்துமீறல்களை தடுக்க, அரசு சிறப்புக்கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி ஆழமும் கொண்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில், 6,300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இங்கிருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, 530 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரித்து வினியோகம் செய்யப் படுகிறது. இந்நிலையில், சென்னையின் நீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புற பகுதி முறையான பராமரிப்பின்றி உள்ளது.

மாசு

இதனால் ஏரியின் நீர் வரத்து பகுதிகளான தண்டலம், மேவளூர்குப்பம், செட்டிப்பேடு, கீவளூர், இருங்காட்டுக்கோட்டை, காட்டரம்பாக்கம், புதுப்பேடு, செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாபான்சத்திரம், ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், செம்பரம்பாக்கம் ஏரியில் பல ஆண்டுகளாக கலந்து வருகிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புற பகுதியில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து மாசடைந்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியை பராமரிக்கும் நீர்வளத் துறையினர், இந்த ஏரியின் மேற்புற பகுதிகளை கண்காணிப்பதே இல்லை. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் பிராதன நீர்வரத்து கால்வாய்களான கிருஷ்ணா கால்வாய், பங்காரு கால்வாய், சவுத்திரி கால்வாயில் கோடை காலத்திலும் கழிவுநீர் ஏரிக்கு செல்கிறது.

புகார்கள்

இதேபோக்கு நீடித்தால், எதிர்காலத்தில் ஏரியின் நீர் விஷமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைத்து, ஏரிக்கு கழிவு நீர் கலப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபுணர் குழுவை அமைத்து, நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டும்.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தினகரன் கூறியதாவது:சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்பாக, மாவட்டம் முழுதும் இருந்து வரும் புகார்கள் குறித்து விசாரித்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு, மாவட்ட பொறியாளராக நான் பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பது குறித்து, விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கழிவுநீர் லாரிகள் அட்டகாசம்

உணவகம், விடுதிகள், குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் லாரிகளில் அகற்றப்படும் கழிவுகள், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் சவுத்திரி கால்வாய், கிருஷ்ணா கால்வாய் மற்றும் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும், போலீசார் கண்டுகொள்ளவில்லை.



ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

அதிகாரிகள் ஏரியை முறையாக பராமரிக்காததால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான நந்தம்பாக்கம், புதுநல்லுார், காட்டரம்பாக்கம், கீவளூர், தண்டலம், செம்பரம்பாக்கம் ஆகிய பகுதியில், ஏரியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவது தொடர்கிறது. ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

செம்பரம்பாக்கம் ஏரி அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் அதை சுற்றியுள்ள சிப்காட் பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு பரப்பளவையும் பராமரிப்பு இல்லாததால், குப்பை கழிவுகள், கழிவு நீர் ஏரியில் கொட்டப்படுகிறது. எனவே, சமூக பொறுப்பு நிதியின் கீழ், ஏரியை சுற்றி தடுப்பு வேலி அமைக்க, தொழிற்சாலைகள் முன் வரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.








      Dinamalar
      Follow us