நயன்தாரா வேண்டும் என சண்முகம் உளறல்: அரசியல் தலைவர்கள் கண்டனம்
நயன்தாரா வேண்டும் என சண்முகம் உளறல்: அரசியல் தலைவர்கள் கண்டனம்
UPDATED : மார் 18, 2026 08:40 AM
ADDED : மார் 18, 2026 06:09 AM

சென்னை: பிரபல நடிகையான நயன்தாராவின் பெயரைக் குறிப்பிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தே.ஜ., கூட்டணி சார்பில், விழுப்புரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், 'அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே போய், 'உங்க கனவ சொல்லுங்க' என்று கேட்கிறார். எனக்கு நடிகை நயன்தாரா வேண்டும். அந்த கனவை நிறைவேற்றுவாரா?' என்றார். இது பெரும் சர்ச்சையானது.
இதற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* தி.மு.க., - எம்.பி., கனிமொழி: அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ, அ.தி.மு.க.,வினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்.
* காங்., - எம்.பி., ஜோதிமணி: ஒரு பெண்ணை பொதுவெளியில் இப்படி அப்பட்டமாக ஆபாசமாகப் பேசுவதை, நாம் இயல்பாகக் கடந்து போய்விட முடியாது. அரசியல் மேடைகளில், பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ஆபாசமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. எனவே, சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
* மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் பாலபாரதி: நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு சண்முகம் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் தேர்தலில் போட்டியிடும் உரிமையை தேர்தல் கமிஷன் ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நடிகையிடமும் தமிழக பெண்களிடமும் சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
* தமிழக பா.ஜ., துணை தலைவர் குஷ்பு: உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணால் தான் பிறக்கிறார். சண்முகம் எதையும் பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். அதே வார்த்தைகளை உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவரை பற்றி சொல்லுவீர்களா? இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

