அரசு புறம்போக்கு நிலத்தில் செம்மண் கொள்ளை... அமோகம்! அதிகாரிகள் 'ஆசி'யுடன் நடப்பதாக குற்றச்சாட்டு
அரசு புறம்போக்கு நிலத்தில் செம்மண் கொள்ளை... அமோகம்! அதிகாரிகள் 'ஆசி'யுடன் நடப்பதாக குற்றச்சாட்டு
UPDATED : பிப் 18, 2025 06:44 AM
ADDED : பிப் 17, 2025 11:56 PM

செங்கல்பட்டு : வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில், அரசு புறம்போக்கு நிலத்தில் செம்மண் மற்றும் சவுடு மண் கொள்ளை அமோகமாக நடந்து வருகிறது. வருவாய்த்துறை, போலீசார், கனிமவளத்துறை அதிகாரிகள் சிலர் ஆசியோடு நடக்கும் இந்த கொள்ளையில், 10 கோடி ரூபாய்க்கு மேல் மண் திருடப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையை ஒட்டிய பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் இருப்பதால், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை உட்பட பல பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானம், புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளுக்கு செம்மண் மற்றும் சவுடு மண் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதனால், வண்டலுார் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து, செம்மண் மற்றும் சவுடு மண் கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது.
ஊனமாஞ்சேரி கிராமத்தில் புல எண்: 480ல் 13 ஏக்கர் மற்றும் புல எண்: 481ல் 11 ஏக்கர் என, மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் செம்மண்ணை வெட்டி எடுத்ததில், ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக செம்மண் மற்றும் சவுடு மண்ணை வெட்டி எடுத்து, லாரிகள் வாயிலாக, இரவு நேரத்தில் சமூக விரோத கும்பல் கடத்தி வருகிறது.
இந்த செம்மண் கொள்ளை, கடந்த மூன்று ஆண்டுகளாக வருவாய் துறை, கனிமவள துறை, போலீசார் ஆதரவுடன் தொடர்ந்து நடந்து வருவதாக, கிராமத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
கடத்தப்படும் இந்த செம்மண்ணை, தனியார் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பூச்செடிகள் வளர்க்கும் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு லாரி செம்மண் மற்றும் சவுடு மண் 7,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் மண் திருட்டு நடந்துள்ளது.
மேலும், இந்த செம்மண் கொள்ளை, பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரின் துணையோடு நடந்து வருவதாகவும் கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, செம்மண் கொள்ளையை தடுத்து, சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'கவனிப்பு' வாங்கும் அதிகாரிகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, கால்நடை மேய்ச்சலுக்காக கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலத்தில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, செம்மண் கொள்ளை நடந்துள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. செம்மண் கொள்ளைக்கு பள்ளம் தோண்டியதால், கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பது அரிதாக உள்ளது. செம்மண் கடத்தலை தடுக்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிராமவாசிகள்,
ஊனமாஞ்சேரி, வண்டலுார்.
கடிதம் தந்துள்ளோம்
ஊனமாஞ்சேரி அரசு புறம்போக்கு நிலத்தில் செம்மண் கொள்ளையை தடுப்பதற்கு, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மண் கொள்ளையை தடுக்க போலீசாரை நியமிக்க கோரி, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அனுப்பு உள்ளோம்.
- வண்டலுார் வருவாய் துறை அதிகாரிகள்

