400 ரேஷன் கார்டு முகவரியில் தவறு; அதிகாரிகள் தட்டிக்கழிப்பால் அதிர்ச்சி
400 ரேஷன் கார்டு முகவரியில் தவறு; அதிகாரிகள் தட்டிக்கழிப்பால் அதிர்ச்சி
ADDED : ஏப் 15, 2025 04:25 AM

வேலுார்: வேலுார் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த, 400 குடும்பத்தினரின், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரியை அதிகாரிகள் தவறுதலாக குறிப்பிட்டுள்ளனர். சிறப்பு முகாமிலும் திருத்தம் செய்ய தட்டிக் கழித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேலுார் மாவட்டம் செம்பராயநல்லுார் பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு சில நாட்களுக்கு முன், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. கார்டில், 10 கி.மீ., தொலைவில் உள்ள மேல்பாடி கிராமத்தில் வசிப்பதாக முகவரி மாற்றி அச்சிடப்பட்டிருந்தது. தமிழகம் முழுதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திருத்த முகாம் நேற்று முன்தினம் நடந்தது. செம்பராயநல்லுாரில் வட்ட வழங்கல் அலுவலர் திவ்யா தலைமையில் முகாம் நடந்தது.
அப்போது, ரேஷன் கார்டில் திருத்தம் செய்யுமாறு மக்கள் வலியுறுத்தினர். அதிகாரிகளோ தனித்தனியாக அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பிக்கும்படி கூறியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
முகவரி திருத்தம் முகாம் என்று கூறிவிட்டு எந்த பணியும் செய்யாமல், எங்களை அலுவலகத்துக்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் செய்த தவறுக்கு எங்களை அலைக்கழிப்பது எவ்விதத்தில் நியாயம்? ஸ்மார்ட் ரேஷன் கார்டில் திருத்தம்கோரி, வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் சென்றால், 1,000 முதல், 3,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.