உளவுத்துறை தகவலால் அதிர்ச்சி; ஈரோட்டில் கடைசி நேர 'கவனிப்பு'
உளவுத்துறை தகவலால் அதிர்ச்சி; ஈரோட்டில் கடைசி நேர 'கவனிப்பு'
ADDED : பிப் 03, 2025 05:56 AM

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால், பிரசாரத்தில் கூட அலட்சியம் காட்டிய தி.மு.க., 'கவனிப்பு'களை குறைத்த நிலையில், நாம் தமிழர் கட்சி காட்டிய பிரசார வேகத்தைக் கண்டு மிரண்டு, தொகுதி மக்களை, கடைசி நேர கவனிப்புக்கு உட்படுத்த, கட்சியினரை முழு வேகத்தில் களம் இறக்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
புறக்கணிப்பு
காங்., எம்.எல்.ஏ., இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, நாளை மறுதினம் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. கடந்த முறை காங்., கட்சிக்காக, தி.மு.க.,வே பிரசாரத்தை முன்னெடுத்ததோடு, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்காக, மக்களை பட்டியில் அடைத்து கவனிப்பு செய்வது முதல், கடைசி நேர கவனிப்பு வரை, அனைத்து விஷயங்களையும் செய்தது.
தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, களத்தில் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார். இதற்காக தி.மு.க., தரப்பில், 80 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக கணக்கு சொல்லப்பட்டது. இம்முறை காங்கிரசுக்கு தொகுதியை விட்டுக்கொடுக்க மனமில்லாத தி.மு.க., தலைமை, தி.மு.க., சார்பில் சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்தது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அக்கட்சிக்கே எப்படியும் வெற்றி கிட்டும்; நாம் ஏன் தேர்தலில் போட்டியிட்டு, பணத்தையும் செலவு செய்து, தோல்வியை எதிர்கொள்ள வேண்டும் என நினைத்த அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.
தீவிர தேர்தல் பிரசாரம்
இதனால், எளிதாக வெற்றி கிடைத்துவிடும் என நினைத்த தி.மு.க., லோக்கல் அமைச்சரான முத்துசாமியை மட்டும் பிரசாரத்துக்கு அனுப்பியது. தொகுதியை பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் விட்டது. இதனால், தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் சுணக்கம் காணப்பட்டது. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஒரு வாரத்துக்கு மேலாக, தொகுதியில் தங்கி இருந்து, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கூட்டம் அலைமோதவில்லை என்றாலும், சீமான் சொல்வதை கேட்க கணிசமான இளைஞர்கள் வருகின்றனர். தொகுதி நிலவரம் குறித்து, உளவுத்துறை வாயிலாக கடைசி நேரத்தில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், 'தன் கட்சிக்கான ஓட்டு தவிர, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., ஓட்டுகளின் பெரும் பகுதியை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பெறக்கூடிய வாய்ப்பு உள்ள்து' என தி.மு.க., மேலிடத்துக்கு அறிக்கை கொடுக்கப்பட்டது.
இது, தி.மு.க., தலைமைக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த முறை இளங்கோவன் பெற்ற ஓட்டுகளை விடக் குறைவாக பெற்றாலே, அது நாம் தமிழர் கட்சி கொண்டாட்டத்துக்கு வாய்ப்பளித்தது போல ஆவதோடு, நான்காண்டு கால தி.மு.க., ஆட்சிக்கு எதிராக, மக்கள் ஓட்டளித்து விட்டனர் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தும்; அவ்வாறு நடந்தால், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். கூட்டணி கட்சிகள் தி.மு.க.,வில் இருந்து வெளியேறும் மனநிலைக்கு வரும்.
இதையெல்லாம் பிரசார காலத்தின் இறுதிக்கட்டத்தில் உணர்ந்து, தி.மு.க., தன் நிலைப்பாடை மாற்றிக் கொண்டு மக்களை கவனிக்க முடிவெடுத்துஉள்ளது. அதற்கான காரியங்களில் நிர்வாகிகள் வேகமாக இறங்கினர். பிரதான கட்சிகள் ஒதுங்கியதால், ஊக்க பரிசு கிடைக்காது என ஏமாற்றத்தில் இருந்த ஈரோடு வாக்காளர்களுக்கு, இன்று காலை முதலே இன்ப அதிர்ச்சி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால், கடந்த முறை நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளுக்கு குறைவில்லாமல், இம்முறையும் ஓட்டுப்பதிவு இருக்கும் என தி.மு.க., எதிர்பார்க்கிறது.
- நமது நிருபர் -