ADDED : ஜன 01, 2025 05:39 AM

தமிழகத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு அரசியல்வாதிகள் சென்றால், பதவி பறிபோகும் என்ற செய்தி உலா வருவது வழக்கம். அதுபோல, கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகருக்கு சென்றால் முதல்வர் பதவி பறிபோகும் என்று கூறப்படுகிறது. இதனால், எந்த முதல்வரும் இங்கு சென்றதே இல்லை.
இதனை பொய்யாக்கும் விதமாக முதல்வர் சித்தராமையா பல முறை அங்கு சென்றார். இதன் தொடர்ச்சியாக, தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்த தயாராகி வருகிறார்.
கடந்த, 2002ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது, பிலிகிரி ரங்கனபெட்டாவில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக வரலாற்றில் சாம்ராஜ் நகரில் நடந்த ஒரே அமைச்சரவை கூட்டம் இது தான். 2002ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் நடந்த கூட்டத்தில், பழங்குடியினர் நலனுக்காக பல பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, நலத்திடங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அடுத்த தேர்தல் நடந்த 2004ல், காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்தது. ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து தரம்சிங் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தார்.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள மலை மஹாதேஸ்வரா மலையில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா நடத்த உள்ளார். ஜனவரியில் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் அமைச்சரவை கூட்டம் நடக்கலாம் என தெரிகிறது.
கொள்ளை பிரியம்
மைசூரு மாவட்டத்தை சேர்ந்த சித்தராமையாவிற்கு சாமராஜ் நகர் என்றால் கொள்ளை பிரியம். பல நலத்திட்ட உதவிகளை செய்து உள்ளார். இதனால், அமைச்சரவை கூட்டத்தின் போது, சாம்ராஜ் நகர், மைசூரு ஆகியவற்றின் வளர்ச்சி குறித்து அதிகம் விவாதிக்கப்படலாம்.
அமைச்சரவை கூட்டம் நடத்துவது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் ஷில்பநாக் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.வெங்கடேஷ், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மகாதேவப்பா கலந்து கொண்டனர்.
- நமது நிருபர் -