sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மவுனமே சிறந்த ஆத்ம தத்துவம்: சிருங்கேரி சன்னிதானம் அருளாசி

/

மவுனமே சிறந்த ஆத்ம தத்துவம்: சிருங்கேரி சன்னிதானம் அருளாசி

மவுனமே சிறந்த ஆத்ம தத்துவம்: சிருங்கேரி சன்னிதானம் அருளாசி

மவுனமே சிறந்த ஆத்ம தத்துவம்: சிருங்கேரி சன்னிதானம் அருளாசி

3


UPDATED : அக் 29, 2024 06:08 AM

ADDED : அக் 29, 2024 12:22 AM

Google News

UPDATED : அக் 29, 2024 06:08 AM ADDED : அக் 29, 2024 12:22 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ''பகவான் சொல்லும் மவுன உபதேசத்தை அனைவராலும் உணர முடியாது. ஆத்ம தத்துவம், ஆன்மாவால்தான் உணர முடியும். மவுனமே சிறந்த ஆத்ம தத்துவம்,'' என, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் பேசினார்.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள், 'விஜய யாத்திரை சென்னை - 2024' நிகழ்வுக்காக, பெங்களூரில் இருந்து, அக்., 26 அன்று காஞ்சிபுரம் வந்தடைந்தார்.

சென்னையில் வரவேற்பு


அங்கு மூன்று நாள் யாத்திரையை முடித்துக்கொண்டு, நேற்று மாலை 6:30 மணிக்கு சென்னைக்கு விஜயம் செய்தார். மயிலாப்பூர் சுதர்மா இல்லம் வந்தடைந்த அவருக்கு, சென்னை மக்கள் சார்பாக, விஜய யாத்ரா குழு நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி வரவேற்று, பூஜைகள் செய்தார்.

தொடர்ந்து சமஸ்கிருதத்திலும், தமிழிலும் வாழ்த்து உரைகள் வாசிக்கப்பட்டன. வாழ்த்து மடலை சிம்சன் குழும தலைவர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். ஆதிசங்கரர் எழுதிய விவேக சூடாமணி நுாலின் சிறப்புகளை மதுரை சின்மையா மிஷன் தலைவர் சிவ லோகானந்தா விபரித்தார்.

பின், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, சிருங்கேரி சன்னிதானம் பேசியதாவது:

எங்கள் மடத்தின் ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகா சுவாமிகளுடைய ஜெயந்தி மகோற்சவமான, இந்த பவித்ரமான சந்தர்ப்பத்தில், சென்னைக்கு வந்திருப்பது ஈஸ்வர சங்கல்பம்.

அவர், இந்த தட்சிணான்மஸ்ய சிருங்கேரி சங்கர மடத்தில், 34வது மடாதிபதியாக இருந்து, உலகத்துக்கு அனுக்ரஹம் செய்துள்ளார். அவரின் அனுக்ரஹத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இறைவனான தட்சிணாமூர்த்தி தன் மவுனத்தால், ரிஷிகளுக்கு தத்துவ உபதேசம் செய்கிறார். பேசினால்தானே உபதேசம்; மவுனத்தில் எப்படி உபதேசம் செய்ய முடியும் என்ற கேள்வி எழும்.

சர்க்கரை இனிப்பாக இருக்கும் என்பதை, ஒருவன் எத்தனை முறை கூறினாலும், அதைப்பற்றி அறியாதவனுக்கு இனிப்பை உணர முடியாது. சர்க்கரையை வாயில் இட்டு சுவைப்பவனுக்கு, சர்க்கரையின் இனிமையை கூற வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல்தான், பரம தத்துவமும், அனுபவித்து உணர வேண்டியது. அதை, வார்த்தைகளால் விளக்க முடியாது. வார்த்தைகளால், சில அனுபவங்களைத்தான் கூற முடியுமே, தவிர முழு தத்துவத்தையும் கூற இயலாது.

குருவிடம் வரும் ஒரு சிஷ்யன், தனக்கு உபதேசம் செய்யும்படி கேட்கிறார். குரு, உட்கார் என்கிறார். சிஷ்யன் உட்கார்ந்திருக்கிறான். குரு ஏதும் சொல்லவில்லை. அமைதி இழந்த சிஷ்யன், 'குருவே உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்கிறார். குரு அவரை உட்கார் என்கிறார்.

இப்படி மூன்று முறை சொன்ன பின், 'குருவே நான் உங்களிடம் உபதேசம் கேட்க வந்தேன். நீங்கள் எனக்கு ஏதும் சொல்லாதது ஏன்' என்று கேட்கிறான்.

அதற்கு குரு, 'நான் இதுவரை உனக்கு உபதேசம் தான் செய்தேன். நீ தான் கவனிக்கவில்லை. உன் கவனம் உபதேசத்தில் இல்லாததால் புரிந்து கொள்ளவில்லை' என்றார்.

பகவான் சொல்லும் மவுன உபதேசத்தை அனைவராலும் உணர முடியாது. ஆத்ம தத்துவம், ஆன்மாவால்தான் உணர முடியும்.

அதனால்தான், பகவான் தனது மவுனத்தை விட்டு, பகவத்பாதாளாக அவதாரம் செய்தார். அவதாரம் என்றால் கீழே இறங்கி வருவது. பகவான் நமக்காக கீழே இறங்கி வந்திருக்கிறார்.

சம்பிரதாயம்


ஒருவர் உதவ கீழே இறங்கி வந்து கையை நீட்டும்போது, கீழே இருப்பவர் தன் கையை உயர்த்தி மேலே வர முயற்சி செய்ய வேண்டும்.

பகவத்பாதாள் அவதரித்து, ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் இருந்து, அத்வைதம் வரை அனைத்தையும் உபதேசம் செய்துள்ளார். அதனால் தான் அவரை ஜகத்குரு என்கிறோம்.

ஜகத்குரு என்பவர் யாரும் அல்லர். நான் இந்த வாழ்க்கையை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி மனதில் வரும்போது, அதற்கு சரியான பதில் யாரிடம் இருந்து கிடைக்கிறதோ, அவர்தான் ஜகத்குரு. அவர் ஆத்மார்த்தமாக வழிகாட்டுவார்.

அப்படி வழிகாட்டியவர்தான் பகவத்பாதாள். அதற்காக பீடத்தை உருவாக்கி உள்ளார். அந்த பீடத்தின் 34வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர பாரதீ.

'பிரம்மக்ஞானி எப்படி இருப்பான் என, கிருஷ்ணரிடம் அர்ஜுணன் கேட்டான். அதற்கு கிருஷ்ணர், பிரம்மக்ஞான லட்சணங்களை கூறினார். அப்படிப்பட்ட லட்சணங்களை உடையவர் சந்திரசேகரேந்திர பாரதீ சுவாமிகள்.

சாஸ்திரங்களில் வல்லமை பெற்றவர். அவர் எழுதிய ஸ்தோத்திரங்களை, இப்போதும் நாம் படிக்கலாம். மகா ஞானியாக, மகா வித்வானாக இருந்து, இந்த உலகிற்கு அனுக்ரஹம் செய்தார்.

அவரின் ஜெயந்தி உற்சவம் நடக்கிறது. இந்த உற்சவத்தில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. சிருங்கேரியில் இருந்து ஆச்சாரியார்கள், சென்னை வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது சம்பிரதாயம். எங்கள் குருநாதர் பல முறை இங்கு வந்துள்ளார். நான் வரவேண்டிய சந்தர்ப்பம், 12 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் வந்துள்ளது.

இங்குள்ள சிஷ்யர்களுக்கும், பீடத்திற்கும், குரு - சிஷ்ய தொடர்பு உள்ளது. இங்கிருக்கும் சிஷ்யர்கள் சிருங்கேரி வந்து தரிசனம் செல்கின்றனர். தர்ம உபசார நிகழ்வில், உற்சாகமாக சேவை செய்கிறார்கள். அதனால் நாமும் இங்கு வந்துள்ளோம்.

தாமதம் ஏன்


ஒருவர் புது ஊருக்கு சென்றார். அங்கு எதிரில் வந்தவனிடம் இந்த ஊர் பெரியவர் யார் என்றார். அவன் தாழை மரத்தை காட்டினான்.

இங்கு தானத்தில் சிறந்தவர் யார் என்றதற்கு, துணியை வெளுக்க போட்டதுபோலவே கிழியாமல் தரும் சலவைக்காரர்தான் என்றான்.

இந்த ஊரில் யார் பண்டிதர் எனக் கேட்டதற்கு, இங்கு எல்லோரும் ஏமாற்றுவதில் பண்டிதர் என்றான். இந்த ஊரில் உன்னால் எப்படி வாழ முடிகிறது என, வந்தவர் கேட்டார். தீங்கு செய்யும் விஷத்திலேயே ஒரு கிருமி வாழுமே, அப்படி, நானும் வாழப்பழகி விட்டேன் என்றான்.

இந்த ஊரில் நல்ல சிஷ்யர்கள் உள்ளனர். அவர்கள், அடிக்கடி, சிருங்கரி வருகின்றனர். அங்கு வரும்போது, இங்கு வர வேண்டும் என்பர். இதைவிட அதிக ஆண்டுகள் ஆன ஊர்களுக்கு செல்ல வேண்டி இருந்ததால், இங்கு வர தாமதமாயிற்று.

இனி, 15 நாட்கள் இங்கு தங்கி, சிஷ்யர்களுடன் பூஜைகளில் கலந்து கொள்வேன். இந்த நல்ல நாளில், ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகா சுவாமிகளுடைய ஜெயந்தி மகோற்சவத்தில், இங்கு வந்து பகவானை பிரார்த்தித்த அனைவருக்கும் நலம் உண்டாகட்டும்.

இவ்வாறு, சன்னிதானம் அருளாசி வழங்கினார்.






      Dinamalar
      Follow us