பித்தளை ஜரிகையில் பட்டு சேலை; வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி
பித்தளை ஜரிகையில் பட்டு சேலை; வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி
ADDED : பிப் 25, 2026 04:32 AM

காஞ்சிபுரம்: தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காரணமாக, அவற்றின் ஜரிகை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு, காஞ்சிபுரத்தில் பட்டு சேலை தயாரிப்பு முடங்கியது. இந்நிலையில், போலி ஜரிகையை பயன்படுத்தி பட்டு சேலை விற்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் கைத்தறி பட்டு சேலைகள், உலக புகழ் பெற்றவை. அதற்கு பட்டு சேலையில் பயன்படுத்தப்படும் வெண்கலம் கலந்த வெள்ளி, தங்கத்தின் ஜரிகை முக்கிய காரணம்.
தற்போது, தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காரணமாக, அவற்றின் ஜரிகை விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. 242 கிராம் அடங்கிய ஜரிகை 30,000 ரூபாய்க்கும் அதிக விலையில் விற்கப்படுகிறது. இதனால், ஜரிகை கிடைப்பதில் தட்டுப்பாடும் ஏற்பட்டு, வெளி சந்தையில் அதிக விலைக்கு வெள்ளி, தங்கம் ஜரிகை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு கைத்தறி சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள பொருட்களை சேர்க்காமல், பித்தளை மற்றும் ரசாயனம் கலந்த போலி ஜரிகையை, உற்பத்தியாளர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். சூரத், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, பார்ப்பதற்கு பட்டு போலவே இருக்கும் பித்தளை ஜரிகை இறக்குமதி செய்யப்படுகிறது. 242 கிராம் அடங்கிய இந்த ஜரிகை 700, 800, 950, 1,050 ரூபாய் என, நான்கு வகைகளில் கிடைக்கிறது.
பித்தளை ஜரிகையை பயன்படுத்தி பட்டு சேலை தயாரிப்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், வெள்ளி, தங்கத்தின் ஜரிகை விலையேற்றம் காரணமாக, இதன் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது.
பட்டு சேலை உற்பத்தியாளர்கள், 100 சேலைகளில் 20 சதவீதம் வரை, பித்தளை ஜரிகையை பயன்படுத்தி, பட்டு சேலை உற்பத்தி செய்து வந்தனர். தற்போது 40 சதவீத சேலைகளை, தங்கம், வெள்ளி சேர்க்காமல், வெறும் பித்தளை ஜரிகையை பயன்படுத்தி, உற்பத்தி செய்ய துவங்கியுள்ளனர்.
இதனால், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில வாடிக்கையாளர்கள், காஞ்சிபுரம் அசல் பட்டு சேலை என நம்பி, பித்தளை ஜரிகை பட்டு சேலைகளை வாங்கி ஏமாறுகின்றனர். காஞ்சிபுரத்தின் பாரம்பரியம், நம்பகத்தன்மை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏ.ஐ.டி.யு.சி., கைத்தறி சங்க மாவட்ட தலைவர் சங்கர் கூறுகையில், ''அசல் ஜரிகையின் விலை தாறுமாறாக உயர்ந்த காரணத்தால், போலி ஜரிகையின் பயன்பாடு வேறு வழியின்றி நெசவாளர்களும், உற்பத்தியாளர்களும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
''ஜரிகையின் விலையை குறைக்க, ஜரிகை உற்பத்திக்கு தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யும்போது விதிக்கப்படும் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்,'' என்றார்.

