அரசு சிறப்பு பஸ்களில் ஒரே 'டிக்கெட்' கட்டணம்: இடைப்பட்ட ஊர்களுக்கு செல்வோர் பாதிப்பு
அரசு சிறப்பு பஸ்களில் ஒரே 'டிக்கெட்' கட்டணம்: இடைப்பட்ட ஊர்களுக்கு செல்வோர் பாதிப்பு
ADDED : பிப் 14, 2025 07:00 AM

சென்னை: 'நீண்ட துாரம் செல்லும் அரசு சிறப்பு பஸ்களில், அந்த வழித்தடத்தில் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணத்தையே, இடையில் இறங்குவோரும் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும்' என, நடத்துனர்கள் நிர்பந்தம் செய்வது, பயணியரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, வெளியூர்களுக்கு வழக்கமாக செல்லும் பஸ்களை விட, கூடுதலாக, 1,500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அனுமதிப்பதில்லை
பயணியர் வருகை குறைவாக இருக்கும் போது, வெளியூர் விரைவு பஸ்களில், குறுகிய துாரத்திற்கு செல்லும் பயணியரை அனுமதிக்கின்றனர். பயணியர் அதிகம் இருக்கும் போது, பஸ் கடைசியாக சென்றடையும் ஊரை சேர்ந்த பயணியருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இடைப்பட்ட ஊர்களுக்கு செல்வோருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அப்படியே பயணித்தால், வழித்தடத்தில் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணத்தை செலுத்தியே, அவர்களும் பஸ் டிக்கெட் வாங்க வேண்டும் என, சில நடத்துனர்கள் நிர்பந்தம் செய்கின்றனர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: நீண்ட துாரம் செல்லும் அரசு பஸ்களில், குறுகிய துார பயணியை புறக்கணிக்கின்றனர். சென்னை - விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம் செல்லும் பஸ்களில், இறுதியான ஊர்களுக்கு செல்லும் பயணியருக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மற்ற பயணியர் ஏற அனுமதிப்பதில்லை. அப்படியே ஏறினாலும், அதிகபட்ச கட்டணத்தை வசூலிக்கின்றனர். கேட்டால், பஸ் இறுதியாக சென்றடையும் ஊருக்கு செல்வோரை மட்டும் தானே ஏறும்படி கூறினோம்.
இறங்குங்கள்
இடையில் உள்ள ஊர்களுக்கு செல்வதாக இருந்தாலும், கடைசி ஊருக்குரிய கட்டணத்தை கொடுத்து டிக்கெட் வாங்குங்கள்; இல்லையெனில் இறங்குங்கள் என, பஸ் பாதி வழியில் செல்லும் போது கூறுகின்றனர். இதனால், வேறு வழியின்றி, அதிக கட்டணத்தை கொடுக்க வேண்டி உள்ளது.
அரசு பஸ்களிலேயே இப்படி செய்தால், நாங்கள் என்ன செய்வது. குறுகிய துாரம் செல்லும் ஊர்களுக்கு தனியாக பஸ் வசதியும் இல்லாததால், விடுமுறை நாட்களில் பயணியர், அரசு பஸ்களிலேயே, அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒழுங்கு நடவடிக்கை
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பயணியர் சிலர் இது குறித்து, புகார் அளித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. பயணியர் எந்த தயக்கமும் இல்லாமல், சம்பந்தப்பட்ட பஸ் வழித்தடம், நேரம் உள்ளிட்ட விபரத்துடன், 1800 599 1500 என்ற எண்ணில் புகார் அளித்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்' என்றனர்.