துர்கா ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழா சோனியா, பிரியங்கா பங்கேற்க மறுப்பு?
துர்கா ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழா சோனியா, பிரியங்கா பங்கேற்க மறுப்பு?
ADDED : ஜூலை 18, 2025 03:59 AM

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா எழுதிய, 'அவரும் நானும்' இரண்டாம் பாகம் நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்க, சோனியா, பிரியங்கா ஆகியோருக்கு அழைப்பு விடுத்த நிலையில், அவர்கள் வர முடியாத நிலையில் இருப்பதாக கூறி விட்டனர்.
தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் அக வாழ்க்கை மற்றும் புற வாழ்க்கையை ஆழமாக சித்தரிக்கும் வகையில், 'அவரும் நானும்' என்ற நுாலை, அவரது மனைவி துர்கா எழுதினார். இதன் முதல் பாகம் கடந்த 2018ல் வெளியானது; இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.
காங்., முதல்வர்
இதில், முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக, இதுவரை வெளிவராத பல்வேறு தகவல்கள், சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நுால் வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நாளை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, காங்கிரஸ் பெண் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
ஆனால், சில காரணங்களால் வர இயலாது என கூறி விட்டதால், தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே பங்கேற்கிறார்.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால், 'அவரும் நானும்' இரண்டாம் பாகத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோர் வெளியிட்டால், தேசிய அளவில் நுாலிற்கு பெருமை கிடைக்கும்; தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்குவதாகவும் அமையும் என கருதி, அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், சோனியா தன் உடல் நலத்தை காரணம் காட்டி மறுத்துள்ளார். வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளதால், பிரியங்காவும் வர இயலாது என கூறி விட்டார். காங்கிரசை சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அழைத்தபோது, அவரும் சில காரணங்களை கூறி நழுவியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே மட்டும் வர சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு
தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கேட்க வேண்டும்; ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சில நிர்வாகிகள் டில்லி மேலிடத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், துர்கா எழுதிய நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்றால், தமிழக காங்., கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தி.மு.க.,விற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. அதனால், சோனியா, பிரியங்கா வரவில்லை; தெலுங்கானா முதல்வருக்கும், காங்., தலைமை அனுமதி அளிக்கவில்லை.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -