காலை உணவு திட்டத்தை துவக்க வந்து அரசியல் பேசிய சபாநாயகர் அப்பாவு
காலை உணவு திட்டத்தை துவக்க வந்து அரசியல் பேசிய சபாநாயகர் அப்பாவு
ADDED : ஆக 27, 2025 04:34 AM

திருநெல்வேலி : ''தமிழகம் வளரக்கூடாது; அதற்காக தமிழக அரசுக்கு எல்லா வகையிலும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது,'' என காலை உணவு திட்ட துவக்க விழாவுக்கு வந்த தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக அரசின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, திருநெல்வேலியில் செவன் டாலர்ஸ் பள்ளியில் நடந்த விழாவில், சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி:
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்காக, தமிழகத்திற்கு 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு தர வேண்டும்; ஆனால், தரவில்லை. அதற்காக, தமிழக அரசு மக்கள் பணியில் சோர்ந்து விடவில்லை; தமிழக அரசு நிதி ஒதுக்கி, கல்வி வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 'விண்வெளியில் முதன் முதலில் கால் வைத்தது அனுமன் தான்' என சொல்லி உள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் கொண்டவர்கள், பிற்போக்கு சிந்தனையான கருத்துகளை தான் பரப்பி வருகின்றனர்.
பா.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர். இதை பற்றி யாரும் பேசுவதில்லை.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் திருவாரூரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், கவர்னர் இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது போன்று பல மசோதாக்கள் கவர்னரால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
மத்திய அரசிடம் அனுமதி பெற்று, 3 சதவீதம் அதிகமாக கடன் வாங்கிக் கொள்ள அனுமதி கோரும் நிதி மசோதா அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், அதுவும் நிலுவையில் தான் உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், உ.பி., உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இது போன்ற நிதி மசோதாக்களுக்கு, 3 சதவீதத்திற்கும் அதிகமாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் வளரக்கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம்.
அமெரிக்க வரி விதிப்பால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, மத்திய அரசின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டுள்ள தோல்வியே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.